“ஒருத்தன ஏமாத்தனனும்னா அவனோட ஆசையை தூண்டனும்” என்ற தாரக மந்திரத்துடன் கடந்த 2014-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சதுரங்க வேட்டை. இயக்குநர் ஹெச்.வினோத் முதன் முதலாகத் இயக்குநராக அறிமுகமானார்.
மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலா இப்படத்தினைத் தயாரித்திருந்தார். பாலிவுட்டில் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராக விளங்கும் நட்டி (நட்ராஜ்) இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். காந்தி பாபு என்ற பெயரில் ஹைடெக் மோசடிகளில் ஈடுபட்டு புத்திசாலித்தனமாக ஏமாற்றுவதுதான் கதையின் சாராம்சமே.
இராஷா நாயர், பொன்வண்ணன், இளவரசு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் இன்றும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்-க்கு தீனி போடும் அட்சய பாத்திரம் என்றே சொல்லலாம். ரேர் பீஸ் செட்டியார்.. என்று சொல்லும் வசனங்கள் இன்றும் பிரபலம். இயக்குநர் ஹெச்.வினோத் இந்தப் படத்தின் கதையை பல தயாரிப்பாளர்களிடமும் கூறியிருக்கிறார்.
ஆனால் அனைவரும் நிராகரித்திருக்கின்றனர். பின்னர் இயக்குநர் நலன் குமாரசாமி மூலம் மனோபாலாவின் அறிமுகம் கிடைக்க அதன்பின் மனோபாலா கதையில் இம்பிரஸ் ஆகி இப்படத்தினைத் தயாரிக்க முன்வந்துள்ளார்.
இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க ஹெச்.வினோத் ஒளிப்பதிவாளர் நட்டி (நட்ராஜை) அணுகியிருக்கிறார். நட்டியிடம் இவர் கதையைச் சொல்லும் முன் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டு இந்த கண்டிஷனுக்கு ஓகே என்றால் நான் கதையைச் சொல்கிறேன் என்று கூற, நட்டியும் என்ன கேள்வி என்று கேட்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்த பிறகு உங்களுக்கு திருடன் என்ற பெயர் கிடைக்கலாம் பரவாயில்லையா என்று கேட்டிருக்கிறார். அவர் நடிப்பு தானே பராவாயில்லை என்றிருக்கிறார். மேலும் நிறைய அடி வாங்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். இந்த இரண்டிற்கும் சம்மதம் தெரிவித்த பின்னரே கதையைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் ஹெச். வினோத்.
அதன் பின் படம் வெளியாகி பொதுமக்களுக்கு நல்ல விழிப்புணர்வினை ஏற்படுத்தியது. சமகால ஏமாற்று வழிகளை களையும் நோக்கில் படம் எடுக்கப்பட்டதால் அதனைப் பலரும் பாராட்டினர். இதை அடிப்படையாக வைத்தே இரும்புத்திரை, சர்கார், சதுரங்க வேட்டை 2 போன்ற படங்கள் அடுத்தடுத்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஹெச்.வினோத், நட்ராஜ் ஆகியோருக்கு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது.