ஒரே கதை.. ஒரே காலகட்டம்.. அனைத்திலும் ஹீரோயின் இரட்டை வேடம்..சக்கைப் போடு போட்ட தமிழ்சினிமாவின் அதிசய படங்கள்

By John A

Published:

இன்று நாம் இயக்குநர் அட்லியை 90களில் வெளியான படத்தின் கதையை தலைப்பை மற்றும் மாற்றி எடுத்திருக்கிறார் என்று கலாய்த்துக் கொண்டிருக்கிறம். மௌனராகத்தை ராஜா ராணி எனவும், அபூர்வ சகோதரர்கள் படத்தை மெர்சல் எனவும், சத்ரியன் படத்தை தெறி எனவும் மாற்றி எடுத்திருப்பார். இந்தப் படங்களின் கதைக்களம் அனைத்துமே ஒன்றுதான்.

அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் நடிகர்கள் மட்டும் மாறியிருப்பார்கள். திரைக்கதை மாற்றப்பட்டிருக்கும். ஆனால் சமகாலத்தில் ஒரே கதையம்சம் கொண்ட 4 படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி அத்தனையும் சூப்பர் ஹிட் அடித்தது என்றால் நம்ப முடிகிறதா? அந்த அதிசயம் 1960களில் நடந்திருக்கிறது.

1958-ல் ஹாலிவுட்டில் வெர்டிகோ என்றொரு படம் வெளியானது. இந்தப் படத்தின் கதையைத் தழுவி தமிழில் 1965-ல் எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி நடிப்பில் கலங்கரை விளக்கம் என்றொரு படம் வெளிவந்தது. இப்படத்தினை இயக்கியவர் கே.சங்கர். இதில் சரோஜா தேவிக்கு இரட்டை வேடம்.

அடுத்ததாக அதே ஆண்டு வெளியான இதயக் கமலம் திரைப்படம். இதுவும் கலங்கரை விளக்கம் படத்தைப் போலத் தான். இதில் ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்திருப்பர். இந்தப் படமும் சூப்பர்ஹிட். கே.ஆர். விஜயாவுக்கு இரட்டை வேடம். இயக்கம் ஸ்ரீ காந்த் என்ற இயக்குநர்.

அதே 1965-ல் வெளியான மற்றொரு திரைப்படம் நீ திரைப்படம். புரட்சித்தலைவி ஜெயலலிதா, டி.ஆர்.ராமன்னா நடிப்பில் வெளிவந்த படம். இதில் ஜெயலலிதாவுக்கு இரட்டை வேடங்கள். கதையும் மேற்கண்ட படங்களைப் போலத்தான்.

பிசாசு படத்தில் கரைய வைத்த ராதாரவியின் நடிப்பு.. மிஷ்கின் முதலில் தேர்வு செய்தது யாரைத் தெரியுமா?

கடைசியாக 1966-ல் ஜெய்சங்கர், ஜெயலலிதா நடிப்பில் வெளியான யார் நீ என்ற திரைப்படம். இதனை சத்யம் என்ற இயக்குநர் இயக்கியிருப்பார். இந்தப் படமும் சூப்பர்ஹிட். ஜெயலலிதாவுக்கு இரட்டைவேடம்.

மேற்கண்ட நான்கு படங்களும் ஒரே ஹாலிவுட் படத்தின் கதையை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். அத்தனை படங்களிலும் ஹீரோயின் இரட்டை வேண்டும். அதிலும் குறிப்பாக ஜெயலலிதா இரண்டு படங்களில் ஹீரோயின். இப்படி தமிழ்சினிமாவில் பல அதிசயங்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு படத்தின் கதையானது நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்தப் படமானது தனக்கான வெற்றியை ரசிகன் மூலமாக துளி விளம்பரம் இன்றி தானாகவே தேடிக் கொள்ளும். அயோத்தி திரைப்படம் போன்று.