தமிழ் சினிமாவில் எப்போதுமே ஹீரோ என்பவர் பொதுமக்களைக் காப்பாற்றுபவராகவும், நல்லவராகவும், அநீதிகளை தட்டிக்கேட்பவராகவுமே பழக்கப்பட்ட நம்மூர் ரசிகர்களுக்கு ஹீரோக்கள் சற்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்தாலோ அல்லது அவர்கள் இறந்துவிடுவதுபோன்ற காட்சிகளில் நடித்தாலோ அந்தப் படம் தோல்வியைத் தழுவி விடுகிறது. அல்லது ரசிகர்கள் அதனை ஏற்க மறுக்கின்றனர்.
ஆனால் இப்போது அப்படியல்ல. கதைக்களங்கள் மாறிவிட்டது. ரசனைகளும் மாறிவிட்டது. ஹீரோ என்பதைத் தாண்டி நல்ல கதைக்களங்கள் தாமாகவே விளம்பரங்களைத் தேடிக் கொண்டு முன்னேறிச் சென்று அதற்குரிய இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும். அதற்கு சமீபத்திய உதாரணம் அயோத்தி திரைப்படம்.
ஆனால் ஆரம்பகால தமிழ்சினிமாக்களில் கிளைமேக்ஸ் காட்சிகளில் திருப்தி இல்லாத ரசிகர்கள் அதனை மாற்றச் சொல்லி பின்னர் வேறு கிளைமேக்ஸ் எடுத்து மீண்டும்அப்படங்களை ஹிட்டாக்கி இருக்கின்றனர். அதற்கு உதாரணம் தான் இந்தத் திரைப்படங்கள்.
வசந்த மாளிகை
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1972-ல் வெளிவந்த திரைப்படம் தான் வசந்த மாளிகை. இதில் சிவாஜி கணேசனின் ஆனந்த் கதாபாத்திரம் காதல் தோல்வியால் இறுதியில் இறக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். இந்த கிளைமேக்ஸ் காட்சியை ரசிகர்கள் வரவேற்கவில்லை. தனது அபிமான நட்சத்திரம் இறந்து போவதைப் பிடிக்காததால் தியேட்டரில் ரகளையில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து இப்படத்தின் கிளைமேக்ஸ் மீண்டும் ஷுட்டிங் எடுக்கப்பட்டு சிவாஜி கணேசன் மீண்டும் வாணி ஸ்ரீ யுடன் இணையும் படி காட்சிகள் அமைக்கப்பட்டது. படத்தின் வெற்றியை சொல்லவே வேண்டியதில்லை.
ரௌத்திரம்
ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம் படத்தில் முதலில் ஸ்ரேயா இறந்து போவது போன்று காட்சிகள் இருக்கும். அதன்பின் மீண்டும் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ஜீவாவுடன் இணைவது போல் மாற்றப்பட்டு வெளியிட படம் வெற்றி பெற்றது.
கிரீடம்
இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் முதல் படம். அஜீத் இந்தப் படத்தின் கிளைமேக்ஸில் சிறைதண்டனை பெற்று அவரது போலீஸ் கனவு நிறைவேறாமல் இருப்பது போல் காட்டியிருப்பார்கள். அதன்பின் சில வருட தண்டனைக்குப் பின் மீண்டும் காவல்துறையில் இணைவது போல் கிளைமேக்ஸ் மாற்ற ரசிகர்கள் அமைதியாகினர்.
உலகநாயகனை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்திய களத்தூர் கண்ணம்மா பாடல் இப்படித்தான் உருவாச்சா..!
பிரியமுடன்
விஜய், கௌசல்யா நடித்த இப்படத்தில் முதலில் விஜய், கௌசல்யா இணைவது போன்று கிளைமேக்ஸ் இருந்தது. அதன்பின் சண்டையில் போலீஸ் விஜய்யை சுட்டுக் கொல்வது போன்று கிளைமேக்ஸ் மாற்றப்பட்டிருக்கும்.
காதலர் தினம்
இப்படத்தில் குணாலும், சோனாலிபிந்த்ரேவும் சேர முடியாமல் சோனாலி பிந்த்ரே விஷம் குடித்து இறப்பது போல் காட்டப்பட்டிருக்கும். அதன்பின் நாசர் இருவரையும் சேர்த்து வைப்பது போல் மாற்றப்பட்டிருக்கும்.
முகவரி
இப்படத்தில் ஜோதிகா வேறொருவருடன் திருமணம் செய்வது போல் இருந்தது. அதன்பின் கிளைமேக்ஸ் மாற்றி அஜீத் இசையமைப்பாளராகி பின் ஜோதிகாவுடன் இணைவது போல் மாற்றியிருப்பர்.
இவ்வாறு பல படங்கள் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு சூப்பர் ஹிட் படங்களாக மாறியது குறிப்பிடத்தக்கது.