நடிகர் திலகத்தின் வாரிசான இளையதிலகம் பிரபு சங்கிலி படத்தின் மூலம் 1982-ல் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். கொழு கொழு உடல்வாகு, சிரித்தால் குழி விழும் கன்னம், குழந்தை போன்ற குணம், வசீகரிக்கும் முகத் தோற்றம் என அமுல் பேபியாக இருந்த பிரபு பெண்களின் மத்தியில் பிரபலமான ஹீரேவாக வலம் வந்தார்.
கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கோழி கூவுது திரைப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. தொடர்ந்து சின்னத்தம்பி பெரியதம்பி, அக்னிநட்சத்திரம், கன்னிராசி போன்ற படங்கள் பிரபுவின் இன்னிங்ஸை தொடர வைத்தன. பி.வாசு இயக்கத்தில் வெளியான சின்னத்தம்பி திரைப்படம் பிரபு சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
சின்னதம்பி திரைப்படம் 150 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை படைத்தது. தொடர்ந்து ராஜகுமாரன், சின்ன மாப்பிள்ளை, டூயட், பாண்டித்துரை, உழவன், கும்பக்கரைத் தங்கையா போன்ற படங்கள் பிரபுவுக்கு தொடர் வெற்றியைக் கொடுக்க முன்னனி நடிகரானார். கார்த்திக் மற்றும் பிரபு ஆகியோர் சமபோட்டியாளர்களாக இருந்தனர். இருவருக்குமே இளையராஜாவின் பாடல்கள் நல்ல புகழைப் பெற்றுத் தந்தன.
ஒரு கட்டத்திற்குப் பின் அஜீத், விஜய் போன்றோரின் வரவால் இவர்களது திரைப்படங்கள் சோடை போகத் தொடங்கின. ஆனால் பிரபு தொடர்ந்து சின்ன பட்ஜெட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, கந்தா கடம்பா கதிர்வேலா, மிடில்கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாபன் போன்ற படங்களில் நடித்து மக்களிடம் தொடர்ந்து வரவேற்பினைப் பெற்றுக் கொண்டிருந்தார் பிரபு. 2003-ம் ஆண்டிற்குப் பின் கேரக்டர் ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார் பிரபு.
தேவர் மகன் பஞ்சவர்ணம் கதாபாத்திரம்.. ரேவதிக்கு அமைந்தது இப்படித்தான்..
இதனிடையே 2006-ல் குஸ்தி என்ற திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்தார் பிரபு. ஏற்கனவே கார்த்திக்குடன் அக்னி நட்சத்திரம், இராவணன் போன்ற படங்களில் நடித்த பிரபு மூன்றாம் முறையாக இணைந்தனர். அப்போது இவர்கள் இருவருக்குமே ஹீரோ மார்க்கெட் கிடையாது. குஸ்தி தயாரித்தவர் சுந்தரி பிலிம்ஸ் முருகன். இயக்கியவர் ராஜ்கபூர். பிரபுவை ஹீரோவாக இவர் புக் செய்யும் போது பிரபுவின் அண்ணன் ராம்குமார் தயாரிப்பாளரிடம் பிரபுவுக்கு இப்போது ஹீரோவாக மார்க்கெட் கிடையாது. எனவே நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் தயாரிப்பாளர் ராம்குமாரின் யோசனையை ஏற்காமல் அவரைக் ஹீரோவக நடிக்க வைத்தார். குஸ்தி திரைப்படம் வெளியாகி சுமாரான வெற்றியையே பெற்றது. எனினும் சம்பள பாக்கியை கொடுப்பதற்காக பிரபுவின் வீட்டிற்குச் சென்றபோது அங்கே ராம்குமார் இருந்திருக்கிறார். நான் அப்பவே சொன்னேனே கேட்டீங்களா என்று கேட்டுக் கொண்டு பின் சம்பள காசோலையை வாங்கி வைத்திருக்கிறார்.
அதன்பின் பிரபு ஹீரோ வேடங்களை ஏற்பதைத் தவிர்த்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க மீண்டும் அடுத்த ரவுண்டில் இப்போது கலக்கி வருகிறார். சந்திரமுகி, அயன், பில்லா, கந்தசாமி, உனக்கும் எனக்கும், வெற்றிவேல் போன்ற படங்கள் பிரபுவின் அடுத்த ரவுண்டில் சூப்பர் ஹிட்டான படங்களாகும்.