மறைந்தது ஆனந்த ராகம்.. பூபாளம் இசைத்த பூங்குயில் உமாரமணன் மறைந்த சோகம்

By John A

Published:

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் 1981-ல் வெளியான படம். இசை இளையராஜா. இதில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்களை வரவழைத்திருந்தார். அப்பாடலைப் பாட பாடகிக்கும் தகவல் தெரிவிக்கப்பட, அதுவரை அவருக்குத் தெரியாது இத்தனை இசைக்கருவிகளுக்கு மத்தியில் தனது குரல் ஒலிக்கப் போகிறது என்று. மேலும் இந்த ஒரு பாடல்தான் தனக்கு இசை உலகில் தனி அடையாளத்தைத் தரப்போகிறது என்றும் அதுவரை அறிந்திருக்கவில்லை.

பாடல் பதிவு ஒத்திகை முடிந்த பின், பதிவு ஆரம்பமாகிறது. 1,2,3 என 16 வது டேக்கில் பாடலை ஓகே சொல்கிறார் இளையராஜா. பின் படம் வெளியாகிறது. அந்த ஒற்றைக் குரலில் தமிழ் இசை ரசிகர்கள் சொக்கிப் போகின்றனர். “ஆனந்த ராகம் கேட்கும் காலம்..” என உச்சாஸ்தொனியில் இசைக்க இந்த ஒரே பாடலில் பிரபலமாகிறார் அந்தப் பாடகி. அவர்தான் உமா ரமணன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த உமாரமணன். 1976களிலேயே தனது கல்லூரிக் காலங்களில் இசை பயின்று பின்னர் முதன் முதலாக பிளேபாய் என்ற இந்திப் படத்தில் பாட ஆரம்பித்தார். அதன்பின் ஏ.பி.நாகராஜனின் கிருஷ்ண லீலா படத்திலும் ஒரு பாடலைப் பாடினார். எனினும் அப்போது அவர் பிரபலமாகவில்லை. இதனையடுத்து இசைஞானியின் கண்களில் பட நிழல்கள் படத்தில் தீபன் சக்கரவர்த்தியுடன் பூங்கதவே தாழ்திறவாய் பாடலைப் பாட இசை உலகின் வெளிச்சத்தில் வந்தார்.

மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்கு மெட்டா? வைரலாகும் வாலி-நா.முத்துக்குமார் பேட்டி

அதன்பின் அடுத்த வருடமே வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தில் ஆனந்த ராகம் பாடலைப் பாடிய பின் அந்தக் குரலைக் கேட்டு மயங்கிப் போனார்கள் இசை ரசிகர்கள். இந்தப் பாடல் அப்போது வானொலிகளிலும், கேசட்டுகளிலும் தொடர்ந்து கேட்க உமாரமணன் பிரபலமானார். தொடர்ந்து இளையராஜா இசையில் பல பாடல்களைப் பாடினார்.

குறிப்பாக தூறல் நின்னுபோச்சு படத்தில் பூபாளம் இசைக்கும்.. போன்ற பாடலும், மேலும் நீ பாதி நான் பாதி…, ஆறும் அது ஆழமில்லை.., கஸ்தூரி மானே கல்யாணத் தேனே.., திருப்பாச்சியில் கண்ணுங் கண்ணும்தான் கலந்தாச்சு… போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி தமிழ் இசை ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தார். பல இசையமைப்பாளர்களுக்கும் பின்னனி பாடியுள்ளார். சன்டிவில் ஒளிபரப்பான சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மேடைப் பாடகர் ரமணனைத் திருமணம் செய்து உமா ரமணன் ஆனார்.

தற்போது 69 வயதான கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்தார். இந்நிலையில் நேற்று (மே.1) அன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு இசை ரசிகர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.