காதலில் முடிந்த மோதல்… கலைவாணரின் வெற்றிக்குப் பின்னால் இப்படி ஒரு பெண்ணா?

By Sankar Velu

Published:

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பது உண்மை தான். இது பல விஐபிகளின் வெற்றிக்குப் பின்னாலும் ஒளிந்துள்ளது. அந்த வகையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கையும் அமைந்துள்ளது.

அவரது மாபெரும் வெற்றிக்கு யார் காரணம் என்றால் அவரது மனைவி டி.ஏ.மதுரம் தான். அது ஒரு சுவாரசியமான சம்பவம். திருச்சியில் நாடகம் நடத்தச் சென்றார் என்எஸ்கே. அவருக்கு வசந்தசேனை படத்திற்கான அழைப்பு வந்தது. அவருக்கு ஜோடி டி.ஏ.மதுரம். அவரது வீடு திருச்சியில் இருப்பதை அறிந்து அவரை சந்திக்கச் சென்றார்.

துடுக்குத்தனமான அவரது பேச்சு மதுரத்தின் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. மதுரமும் அவருடன் இணைந்து நடிக்க விரும்பவில்லை. அட்வான்ஸ் வாங்கியதால் இருவரும் படத்தில் நடித்தே ஆக வேண்டிய நிலைமை.

வேறு வழியில்லாமல் மதுரம் வசந்தசேனா படப்பிடிப்புக் குழுவினருடன் புனே புறப்பட்டார். ஆரம்பத்தில் கலைவாணர் மீது எரிச்சல் இருந்தது. ஆனால் என்ன அதிசயம் பாருங்கள். திரும்பி வரும்போது தம்பதியராக வந்தார்கள்.

இதற்குக் காரணம் புனே ரயில் பயணம் தான். சென்னை சென்ட்ரல் நிலையத்தில் புனே செல்லக் காத்திருந்தனர். தயாரிப்பாளரோ வழிச்செலவுக்குப் பணம் கொடுக்காமல் மறந்து விட்டார். எல்லோரும் படபடத்தனர். ஆனால் என்எஸ்கே மட்டும் அசால்டாக இருந்தார். முதல் நாள் பயணத்திற்கு அவரே தன் சொந்த செலவில் எல்லாருக்கும் உதவி செய்தார். அடுத்த நாள் மதுரத்திடம் வந்து உதவி கேட்டார்.

NSK, Maduram
NSK, Maduram

மதுரமும் கலைவாணரின் சேவை மனப்பான்மை கண்டு ஆச்சரியப்பட்டு பணத்தைக் கொடுத்தார். மறுநாள் ரெயில் புனேவை அடைந்தது. அப்போதும் மதுரத்திடம் உதவிக்கு வந்தார். எரிச்சலுடன் வந்த மதுரத்தைப் பார்த்து மெல்லிய குரலில் கலைவாணர் சொன்னார். ‘இதப் பாரு மதுரம், நாம சாதாரண நாடக நடிகருங்க. ஏதோ மறதில தயாரிப்பு நிர்வாகி பணம் கொடுக்கல. எப்படியும் அது கிடைச்சிரும்.

அதுக்காக பழிவாங்க நினைச்சு நம்ம எதிர்காலத்தைக் கெடுத்துட வேண்டாம். யருக்கிட்டயும் துளி காசும் இல்லை. 2 நாளைக்கு நாம பார்த்துக்கிட்டா அது எப்படியும் திரும்பக் கிடைக்கப் போகுது. இருக்கற நாம இல்லாதவங்களுக்கு கொடுக்கறது தான் இந்த நேரத்துல நல்லது’ என்றார். இதைக் கேட்டு மதுரம் நெகிழ்ந்து விட்டார்.

பணத்தோடு தன் நகைகளையும் கழற்றிக் கொடுத்து விட்டார். இதைப் பார்த்ததும் கலைவாணருக்கு அவர் மீது ஒரு அன்பு பிறந்தது. நாடகம் முடியும் தருவாயில் என்எஸ்கே. மதுரத்திற்குக் காதல் தூது விட்டார். ‘உங்களை கலைவாணர் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்’ என்றார் அவரது தூதர். மதுரமும் தலையாட்டினார். அப்புறம் என்ன சொல்லவா வேண்டும். படப்பிடிப்பு முடிந்ததும் இயக்குனர் ராஜா சாண்டேவின் தலைமையில் திருமணம் முடிந்தது. இருவரும் தம்பதியராக வீடு திரும்பினர்.