மேடையில் எம்ஜிஆர் இருக்க.. பயமே இல்லாமல் அவரையே விமர்சித்த மகேந்திரன்.. பதிலுக்கு புரட்சித் தலைவர் செஞ்ச விஷயம்..

By Ajith V

Published:

இன்னும் நூறு அல்லது இருநூறு ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், தமிழ் சினிமாவின் டாப் 5 இயக்குனர்கள் யார் என் பட்டியல் போட்டால் நிச்சயம் மகேந்திரனுடைய பெயர் இடம் பிடித்திருக்கும். அந்த அளவுக்கு யதார்த்த சினிமாக்களை உருவாக்கி வந்த மகேந்திரன், ஏராளமான திரைப்படங்களுக்கு கதை மற்றும் வசனங்களை எழுதி உள்ளார்.

தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் உருவான முள்ளும் மலரும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து, கதை மற்றும் வசனம் எழுதிக் கொண்டிருக்க உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, சாசனம் உள்ளிட்ட நிறைய திரைப்படங்களையும் இயக்கி இருந்தார்.

தொடர்ந்து, கதை ஆசானாகவே அறியப்பட்ட மகேந்திரன், விஜய் நடிப்பில் உருவான தெறி, ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட, நிமிர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இதனிடையே, கடந்த 2019 ஆம் ஆண்டு வயதின் காரணமாக காலமானார் மகேந்திரன். இந்த நிலையில், தனது கல்லூரி காலத்தின் போது மேடையில் இருந்த அன்றைய சூப்பர்ஸ்டார் எம்ஜிஆரை விமர்சித்து சொன்ன கருத்தும், பதிலுக்கு புரட்சித் தலைவர் சொன்ன பதிலை பற்றியும் தற்போது பார்க்கலாம்.

கல்லூரியில் மகேந்திரன் படித்து கொண்டிருந்த காலத்தில், உலக சினிமாக்கள் நிறைய பார்த்து தமிழ் சினிமா எந்த அளவுக்கு யதார்த்தத்தில் இருந்து மாறி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார். இதனால், தமிழ் சினிமா மீது தனது கல்லூரி நாட்களில் அதிக கோபத்துடன் இருந்ததாகவும் தெரிகிறது. அப்படி இருக்கும் போது தான், தனது கல்லூரியில் சிறப்பு விருந்தினராக எம்ஜிஆர் வந்திருந்த போது அவருக்கு முன் பேசுவதற்கான வாய்ப்பு ஒன்று கிடைத்திருந்தது.

“நாம் நிஜ வாழ்க்கையில் காதலித்தால், கல்லூரி முதல்வரோ அல்லது குடும்பத்தினரோ ஏற்றுக் கொள்வார்களா என கேட்டால் நிச்சயம் கிடையாது. ஆனால் மேடையில் இருக்கும் எம்ஜிஆர், தனது படங்களில் எல்லாம் காதலித்த பெண்ணுடன் ஊர் முழுக்க சுற்றுகிறார். ஆனால், நம்மை போல கல்லூரி முதல்வரோ, அல்லது அவரது பெற்றோர்களோ ஒரு கேள்வியை கூட கேட்பதில்லை” என மகேந்திரன் பேச, அங்கிருந்தவர்கள் அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர்.

இன்னொரு பக்கம், தனது ரசிகர்களுக்காக ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்து கொண்டிருந்த எம்ஜிஆர், கைத்தட்டலை கேட்டு யார் பேசுவது என்பதை கவனிக்க தொடங்கினார். தனது திரைப்படங்களை சுற்றி பெரும்பாலும் விமர்சனமாக பேசியனாலும், மகேந்திரனுடைய வாதம் சரி தான் என்பதை உணர்ந்து கைத்தட்டி ரசித்தார் எம்ஜிஆர்.

அத்துடன் அங்கிருந்து கிளம்பிய போது, ஒரு சிறிய காகிதம் ஒன்றில், ‘நல்ல பேச்சு, நல்ல கருத்து. நகைச்சுவையுடன் உணர்வுபூர்வமான விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுதி உள்ளவர். வாழ்க, அன்பர் எம்ஜிஆர்’ என எழுதி மகேந்திரன் கையில் கொடுத்திருந்தார். அப்படி இருக்கையில், எந்த மேடையில் எம்ஜிஆரை விமர்சனம் செய்தாரோ, அவர் மூலம் தான் திரை உலகில் அறிமுகமாக போகிறார் என்பது நிச்சயம் மகேந்திரனுக்கு தெரிந்திருக்காது என்பது தான் நிதர்சனமான உண்மை.