திருட்டு விசிடியால் மரண அடி வாங்கிய ஜக்குபாய்.. இணையத்தில் லீக்-ஆகி பெட்டிக்குள் சுருண்ட சம்பவம்

By John A

Published:

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இதுவரை இயக்கிய திரைப்படங்களில் அதிகமான படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் சரத்குமார் தான். கே.எஸ்.ரவிக்குமாரின் சினிமா வாழ்க்கை ஆரம்பித்த காலகட்டங்களிலேயே இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு இன்றுவரை இணைபிரியாமல் இருக்கிறது.

கே.எஸ்.ரவிக்குமார் சரத்குமாரை வைத்து சேரன் பாண்டியன், பேண்டு மாஸ்டர், நட்புக்காக, பாட்டாளி, நாட்டாமை, பாறை, சமுத்திரம் உள்ளிட்ட படங்களைக் கொடுத்தனர். இவற்றில் பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.

அதேபோல் இவர்கள் கூட்டணியில் 2010-ல் வெளிவந்த திரைப்படம்தான் ஜக்குபாய். ஏற்கனவே கடந்த 2004-ல் ஜக்குபாய் என்ற பெயரில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்பட்டு பின் அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்நிலையில் சரத்குமார், ஸ்ரேயா, கவுண்டமணி ஆகியோர் நடிப்பில் ஜக்குபாய் திரைப்படம் உருவானது.

இதில் சரத்குமார் மெச்சூர் கதாபாத்திரமாக நடித்திருப்பார். பிரெஞ்சு திரைப்படமான வசாபியின் ரீமேக் தான் இந்த ஜக்குபாய். படத்தினைத் தயாரித்தவர் ராதிகா. படம் அருமையான ஸ்கிரிப்டைக் கொண்டு உருவாகியிருந்த வேளையில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ரிலீஸ்க்கு தயாராக இருந்தது.

தம்பி இசையால் மெய்சிலிர்த்துப் போன அண்ணன்.. கங்கை அமரனுக்கு 30 பவுன் தங்கச் சங்கலியை பரிசாய் அணிவித்த இளையராஜா..

இந்நிலையில் படக்குழுவினைச் சேர்ந்த ஒருவர் இத்திரைப்படத்தினை இணையத்தில் வெளியிட அது திருட்டு வி.சி.டியாக உருப்பெற்று படம் ரிலீஸ் ஆகும் முன்பே மக்களால் பார்க்கப்பட்டது. இது கே.எஸ்.ரவிக்குமாருக்கும், சரத்குமாருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. உடனே அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியிடம் முறையிட்ட போது அவரும் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.

அதன்பின் வேறொரு குழுவினரால் படத்தின் எடிட்டிங் அனைத்தும் மாற்றப்பட்டது. கே.எஸ்.ரவிக்குமார் எந்தக் கோணத்தில் படம் எடுத்திருந்தாரோ அந்தத் தன்மை படத்தில் முற்றிலும் மாற்றப்பட்டிருந்தது. இதனால் படம் ஒரிஜினல் தன்மையை இழந்தது. பலத்த நஷ்டமடைந்தது. திருட்டி வி.சி.டி என்னும் அரக்கனால் ஒரு சினிமாவே வந்த சுவடே தெரியாமல் பெயருக்கு திரையிடப்பட்டு பின் தியேட்டரை விட்டே ஓடியிருக்கிறது. இப்படி திருட்டு விசிடியால் அப்போது அழிந்த படங்கள் ஏராளம். இதனால் தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுக்கவே பயந்தனர். பின்னர் கடுமையான கட்டுப்பாடுகளால் பைரசி  முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது.