இசைஞானி இளையராஜாவிடம் வாலி, வைரமுத்து, புலமைப்பித்தனுக்கு அடுத்தபடியாக அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர். மு. மேத்தா. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்த மு.மேத்தா மரபுக் கவிதை, புதுக்கவிதைகள் புனைவதில் வல்லவர். இலக்கிய வட்டத்தில் மேத்தாவைத் தெரியாதவர்கள் எவருமிலர்.
இவருடைய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதைத் தொகுப்பிற்காக இலக்கிய உலகின் உயரிய விருதான சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றார். மேலும் ஏராளமான சிறுகதைகளையும், கவிதைகளையும் இயற்றியுள்ள மு.மேத்தா இளையராஜாவின் இசையில் பல பாடல்களை எழுதியுள்ளார்.
இளையராஜாவுக்காக பன்னீர் புஷ்பங்கள் படத்தில் தனது முதல் பாடலை எழுதினார். அதன்பின் நான் சிகப்பு மனிதன் படத்தில் இடம்பெற்ற பெண்மானே சங்கீதம் பாடவா என்ற பாடல்தான் இவருக்கு திரைத்துறையில் புகழைப் பெற்றுக் கொடுத்தது. அதன்பின் தொடர்ச்சியாக இளையராஜா இசையில் பல பாடல்களை எழுதினார். இதில் குறிப்பிட்ட பாடல்தான் இரட்டைவால் குருவி படத்தில் இடம்பெற்ற ராஜ ராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேசம் நீதான்.. பாடல். இந்தப் பாடலை இன்றும் இளசுகள் விரும்பிக் கேட்கின்றனர். ஏனெனில் இந்தப் பாடலில் காமத்துப் பாலைக் கொட்டி எழுதியிருப்பார் கவிஞர் மு.மேத்தா.
அதேபோல் இளையராஜாவின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பாடலான காசி திரைப்படத்தில் இடம்பெற்ற என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே பாடலும் மேத்தா எழுதியதே. இதில் இறைவனிடம் வரங்கள் கேட்டேன்.. ஸ்வரங்களை அவனே கொடுத்தான் என்ற வரிகள் அப்படியே இளையராஜாவையே குறிக்கும். மேலும் ரெட்டை வால் குருவி படத்தின் ஹிட் பாடலைத் தொடர்ந்து ரஜினி நடித்த வேலைக்காரன் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
இளையராஜாவின் இசையில் பாடல் எழுதுவது பற்றி மேத்தா குறிப்பிடும் போது மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடல் எழுதுவது ஆற்றில் இறங்கி நாமே நீச்சலடித்து மறுகரைக்குப் போவது போல் இருக்கும். ஆனால் இளையராஜாவின் இசை படகில் நாம் துடுப்பு போட்டு செல்வது போன்று இருக்கும் எனக் கூறியிருக்கிறார். மேலும் பவதாரிணிக்கு தேசிய விருதினைப் பெற்றுக் கொடுத்த மயில் போல பொண்ணு ஒன்னு பாடலும் இவர் இயற்றியதே.