தமிழ்த்திரை உலகில் பிரபல நடிகர்கள் எல்லாரையும் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். அந்தவகையில் ஒவ்வொரு நடிகருக்கும் என்று தனிப்பட்ட ஸ்டைல், குணாதிசயங்கள் உண்டு. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த், கார்த்திக், அஜீத், விஜய், பிரசாந்த், சூர்யா, கார்த்தி, விக்ரம் என எந்த நடிகரும் மற்றொருவரைப் போல நடிக்க மாட்டார்கள்.
அப்படி நடித்தாலும் அது எடுபடாது. சுவாரசியமாகவும் இருக்காது. அவங்க அவங்க ஸ்டைல்ல நடித்தால் மட்டும் தான் அந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகனுக்கும் ஒரு மனநிறைவு உண்டாகும். இந்தக் கருத்தையே பேட்டி ஒன்றில் மக்கள் நாயகன் ராமராஜனும் எடுத்துப் பேசியுள்ளார்.
ராமராஜன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் இப்படி பேசினார். தனக்கு எந்தக் கேரக்டர் வருமோ அதை மட்டும் தான் நடிப்பேன். அதை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று சொன்னார்.
அது மட்டும் அல்லாமல் பொதுவா தாய்மார்களுக்குப் பிடிக்கிற மாதிரி தான் நடிப்பேன். என் படத்துல தண்ணீ அடிக்கிறது, தம் அடிக்கிறது, ஆபாசமான இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசறதுன்னு நெகடிவ் ரோல்களும் நடிக்க மாட்டேன் என்றார் ராமராஜன்.
அதற்கான ஒரு உதாரணமும் சொன்னார் மக்கள் நாயகன். அதாவது அந்தக் காலத்தில் எம்ஜிஆரிடம் வந்து விநியோகஸ்தர்கள் எல்லாம் நீங்க சிவாஜி மாதிரி ஸ்டைல்ல ஒரு படமாவது நடிங்கன்னு கேட்டாங்க. அதுக்கு அப்படியா சரின்னு பரிசு என்ற படத்தில் நடித்தார். ஆனால் படம் சரியாகப் போகல. அதே மாதிரி சிவாஜியிடம் வந்து நீங்க எம்ஜிஆர் மாதிரி ஸ்டைல்ல ஒரு படம் நடிங்கன்னு கேட்டாங்க.
அவரும் அப்படியான்னு கேட்டுவிட்டு சரின்னு தங்கச்சுரங்கம் படத்தில் நடித்தார். அதுவும் பெரிசாப் போகல. அதனால அவங்க திரும்பவும் அவங்களுடைய கேரக்டரிலயே நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
நானும் அப்படித்தான். நான் யாரையும் பார்த்து காப்பி அடிச்சி நடிக்க மாட்டேன். நான் நானாகத் தான் நடிப்பேன். எனக்கு எது வருமோ அதைத் தான் பண்ணுவேன் என்கிறார் ராமராஜன்.
இதைப் பார்க்கும் போது உலகநாயகன் கமல் நடித்த வாழ்வே மாயம் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. ‘யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே யாரார்க்கு எந்த மேடையோ? ஆடும் வரைக் கூட்டம் வரும். ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்…’ என்ற வரிகள் உண்மைதானே.