நாட்டுப்புறப் பாடகர்களாக இருந்து தமிழ் சினிமாவில் பின்னனிப் பாடகர்களாக மாறியவர்கள் நிறைய உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் புஷ்பவனம் குப்புசாமி, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், பரவை முனியம்மா, கானா பாலா, கானா உலகநாதன், சின்னப்பொண்ணு எனப் பலர் உள்ளனர்.
இவர்களில் சிலர் மறைந்தாலும் இவர்கள் பாடல் இன்றுவரை கோவில் திருவிழாக்களிலும், கிராமங்களில் விஷேசங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் சினிமாவிற்கு வந்தவர் தான் அந்தோணி தாசன். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி தாசன் குறுகியகாலத்திலேயே தமிழ் சினிமாவில் பலநூறு பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
2013-ல் வெளியான சூதுகவ்வும் படத்தில் காசு, பணம், துட்டு மணி மணி பாடல் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அந்தோணி தாசன் அதன்பின் மளமளவென பல பாடல்களைப் பாடினார். சில பாடல்களில் அவரே நடித்தும் இருப்பார். மேலும் 2016-ல் வெளியான உறியடி திரைப்படத்தில் இடம்பெற்ற
சொக்கவச்சப் பச்சக்கிளி
சுத்த உட்டுப் பாத்ததென்ன
…………
மானே மானே
உறவென நினைச்சேனே என்ற பாடல் வெகு பிரபலமானது. இந்தப் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை மட்டும் அவரே இசையமைத்து , எழுதிப் பாடியிருந்தார் அந்தோணி தாசன்.
முதன் முதலாக இந்தப் பாடலை பல வருடங்களுக்கு முன்பே பல்வேறு மேடைகளில் பாடியிருக்கிறார். குறிப்பாக சென்னை சங்கமம் போன்ற இசை விழாக்களில் பாடி பல்வேறு தரப்பினரிடமிருந்தும் மிகுந்த பாராட்டைப் பெற்றதாக இந்தப் பாடல் விளங்கியிருக்கிறது.
ராமராஜன்.. பெயருக்கும், உடுத்தும் ஆடைக்கும் பின்னால இப்படி ஒரு ரகசியமா?
இந்தப் பாடலை பல்வேறு இசையமைப்பாளர்கள் கேட்ட நிலையில், உறியடி படத்தில் விஜயக்குமார் கேட்ட போது இதனைக் கொடுத்திருக்கிறார் அந்தோணி தாசன். கிராமிய இசை, நாட்டுப்புறம் ஆகிய இரண்டும் கலந்து வெளிவந்த இந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்தோணிதாசனுக்கும் பெரும்புகழை ஏற்படுத்திக் கொடுத்தது.
மேலும் உஷாஉதூப்புடன் இணைந்து பல்வேறு ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார். அதில் வண்டியில நெல்லு வரும் பாடல் மிகவும் பிரபலமானது. மேலும் ஆம்பள படத்தில் ஹிப் ஹாப் இசையில் இவர் பாடிய பாசங்கள் நேசங்கள் பாடல் இன்றும் ஸ்டேட்டஸ்களில் தினமும் வைக்கப்படும் பாடலாக ஒலிக்கிறது.