நாயகன் பார்த்து மிரண்டு போன ரஜினி.. சந்தேகத்துடன் வெளிவந்த மனிதன்.. வெற்றிக்குப் பின் ரஜினி செய்த கைமாறு!

By John A

Published:

1987ம் வருடம் இந்திய சினிமா உலகிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.அந்த வருடத்தில் தான் தீபாவளி அன்று நான் சிரித்தால் தீபாவளி என நாயகன் படம் வெளியாகி திரையிட்ட இடமெல்லாம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி ஆஸ்கர் விருது வரை சென்றது. மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.

கமலின் நாயகனுடன் ரஜினி போட்டி போட்ட படம் தான் மனிதன். நாயகன் படம் ரிலீசுக்கு முந்தைய நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரிவியூ பார்த்துவிட்டு வந்திருக்கிறார். படத்தைப் பார்த்து மிரண்டு போனவர் உடனடியாக ஏவிஎம் ஸ்டுடியோவிற்குச் சென்றிருக்கிறார்.

அங்கு ஏவிஎம் சரவணனுடன், பஞ்சு அருணாச்சலமும் இருக்க அப்போது ரஜினி, “நாயகன் படம் பார்த்துவிட்டு வருகிறேன். படம் வேறு லெவலில் இருக்கிறது. நாளை நம் மனிதன் படமும் ரிலீஸ் ஆகிறது. கலெக்சன் குறையுமோ என சந்தேகமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். அப்போது அங்கிருந்த பஞ்சு அருணாச்சலம் நானும் நாயகன் பார்த்து விட்டேன். மனிதன் படமும் பார்த்துவிட்டேன். அந்தக் கதை வேறு, இது வேறு.. இரண்டிற்கும் சம்பந்தமே கிடையாது. எனவே தாராளமாக வெளியிடலாம்.

நடிகர் சரவணனின் மைனஸையே பிளஸ்ஸாக மாற்றி நடிக்க வைத்த அமீர்.. பருத்திவீரன் சித்தப்புவாக கலக்கியது இப்படித்தான்..

நாயகனுக்கு எவ்வளவு வசூல் வருகிறதோ அதில் எந்தக் குறையும் வைக்காமல் மனிதன் படத்திற்கும் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். உடனே ரஜினி அப்படி நடந்து விட்டால் என்னுடைய அடுத்த படத்திற்கு உடனே கால்ஷீட் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

பஞ்சு அருணாச்சலம் சொன்னது போலவே நாயகன் படம் பெற்ற வெற்றியைப் போல் மனிதம் படமும் வெற்றி பெற்றது. சென்னையில் 175 நாட்களும், தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய பகுதிகளில் 100 நாட்களைக் கடந்தும் வெற்றி பெற்றது. சொன்ன வாக்கைக் காப்பாற்ற ரஜினி தனது அடுத்த படத்திற்கு உடனே பஞ்சு அருணாச்சலத்திற்குக் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அப்படி உருவான படம் தான் குரு சிஷ்யன்.

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த மனிதன் படத்தில் அதுவரை இருந்த ரஜினியின் ஹேர்ஸ்டைல் மாற்றப்பட்டு மிகவும் ஸ்டைலிஷான ஹீரோவாக ரசிகர்களுக்கு புது தோற்றத்தினைக் கொடுத்திருப்பார். இந்த ஹேர் ஸ்டைலே இப்போது வரைக்கும் ரஜினிக்கு நிரந்தரமாகி இருக்கிறது.