இதுதான் ஃபர்ஸ்ட் டைமா.. ஐபிஎல் வரலாற்றில் ரசலுக்கு முதல் முறையாக கிடைக்க போகும் பாக்கியம்..

By Ajith V

Published:

ஐபிஎல் தொடரை பொறுத்த வரையில் பல வீரர்கள் ஒரு அணிக்காக நீண்ட ஆண்டு காலம் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருப்பார்கள். அதே வேளையில், கடந்த 17 வருட ஐபிஎல் வரலாற்றில் சில வீரர்கள் ஏறக்குறைய ஐந்து முதல் ஆறு அணிகள் வரை ஆடியவர்களும் இருப்பார்கள். இதில் முதலில் குறிப்பிட்ட பட்டியலில் அரிதான வீரர்களை காணப்பெறும் நிலையில், அதில் சட்டென நினைவுக்கு வருபவர் தான் பெங்களூரு வீரர் விராட் கோலி.

அவரைப்போல தோனி, ரோஹித் சர்மா, பும்ரா உள்ளிட்ட பல வீரர்களும் தொடர்ந்து ஒரே அணிக்காக நீண்ட சீசன்கள் ஆடி வரும் நிலையில் கொல்கத்தா அணிக்காக நீண்ட ஆண்டு காலம் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் தான் ஆண்ட்ரே ரசல். இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணி வீரராக காலடி எடுத்து வைத்திருந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து கொல்கத்தா அணிக்காகவும் ஆடி வருகிறார்.

கொல்கத்தா அணி தோற்று போகும் என நினைத்த பல போட்டிகளின் ரிசல்ட்டை தனியாளாக அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றி ரூட்டிலும் மாற்றி உள்ளார் ரசல். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மேட்ச் வின்னிங் வீரர்களில் ஒருவராக இருக்கும் ஆண்ட்ரே ரசல், நடப்பு ஐபிஎல் தொடரில் 13 இன்னிங்ஸ்கள் ஆடி 222 ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும் 64 ரன்கள் இவரது அதிகபட்ச ஸ்கோராகவும் இந்த சீசனில் உள்ளது. பேட்டிங் மட்டுமில்லாமல் ஆல்ரவுண்டரான ரசல், இந்த சீசனில் 14 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இப்படி கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டராக இருக்கும் ரசல், இந்த சீசனில் மற்ற அனைத்து வீரர்களுடன் சேர்ந்து தங்கள் அணியை இறுதி போட்டிக்கு நான்காவது முறையாக அழைத்துச் சென்றுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த குவாலிஃபயர் 1 போட்டியில் கொல்கத்தா அபார வெற்றி பெற்று தற்போது இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 2012 மற்றும் 14 ஆகிய ஆண்டுகள் போல இந்த முறை கொல்கத்தா அணி நிச்சயம் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இதற்கிடையில் தான் ஐபிஎல் வரலாற்றிலேயே ரசல் ஆடப்போகும் முதல் இறுதிப் போட்டியாக இந்த ஃபைனல்ஸ் மாறி உள்ளது. இதற்கு முன்பாக கொல்கத்தா அணி 2014 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஃபைனல்ஸ் முன்னேறிய போதும் ஆடும் லெவனில் அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை நிச்சயம் ரசலுக்கான இடம் இருக்கும் என்பதால் அவரது ஐபிஎல் பயணத்தில் ஆடப் போகும் முதல் இறுதி போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.