வாராயோ வெண்ணிலாவே.., புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்குறான்.., காந்தக் குரலால் தமிழ் சினிமாவைக் கிறங்கடித்த குரலரசி பி.லீலா…

By John A

Published:

தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டங்களில் இசையுடன் சேர்ந்தே கீர்த்தனைகளாக பாடல்கள் பாடி வந்த நிலையில் பல்லவி, சரணம் என பாடல்கள் அடுத்தடுத்த பரிணாமம் பெற பல பாடகர்கள் உருவாயினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்தான் பொறையாத்து லீலா என்ற பி.லீலா. கேரளாவின் பாலக்காட்டில் பிறந்த லீலா பத்தமடை கிருஷ்ணய்யர், ராமபாகவதர், செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற மாபெரும் கர்நாடக இசை மேதைகளிடம் இசை பயின்றார். இயல்பாகவே காந்தக் குரல் கொண்ட பி.லீலாவுக்கு முறைப்படி பயின்ற சங்கீதம் கைகொடுக்க தனது 12 வயதிலேயே தனியாகக் கச்சேரி செய்தார்.

மலையாள சினிமா உலகில் 1949-களில் பின்னணிப் பாட ஆரம்பித்த லீலாவை தமிழ் இசையமைப்பாளர்கள் அள்ளிக் கொண்டு வந்து பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாட வைத்தனர். அப்படி உருவானவை தான் இன்றும் வெண்ணிலவையே கணவன் மனைவி சண்டையின் சமாதானத்திற்கு தூது விட்ட வாராயோ வெண்ணிலாவே என்ற பாடல்.

மிஸ்ஸியம்மா படத்தில் இடம்பெற்ற இப்பாடல் இன்றும் இலக்கண நடையில் அமைந்த சூப்பர்ஹிட் பாடலாகத் திகழ்க்கிறது. இதன்பின் அந்தக் காலத்தின் சூப்பர் கானாவாக விளங்கிய உத்தமபுத்திரன் படத்தில் இடம்பெற்ற புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்குறான் பாடலைத் தெரியாதவர்களே இல்லை எனலாம்..

தள்ளிப் போன முதல் படம்…மல்யுத்த வீரர் மலையாள சூப்பர் ஸ்டாராக மாறிய வரலாறு..மோகன் லால் திரைப்பயணம்

நடிகை மும்தாஜ் சாக்லேட் படத்தில் மலை, மலை மருதமலை பாடலில் புள்ளி வைக்கிறான் பாடலை இணைத்து ஆடியதால் இந்தப் பாடல் மேலும் பிரபலம் அடைந்தது. மேலும் பாதாள பைரவி படத்தில் இடம்பெற்ற அமைதியில்லா என் மனமே.. என் மனமே இன்று கேட்டாலும் சொக்கவைக்கும் பாடல், பாகப்பிரிவினை படத்தில் இடம்பெற்ற தாழையாம் பூ முடிச்சு, வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் ராஜா மகள் பாடல் போன்றவை காலத்தால் அழியாத சூப்பர் காவியங்கள் பல லீலாவின் குரலில் இன்றும் அதே இளமையுடன் காதுகளில் ரீங்காரமிடுகின்றன.

பெரும்பாலும் கண்டசாலாவின் இசையில் பல பாடல்ளைப் பாடிய லீலா எஸ். ஜானகிக்கு சிங்கார வேலனே பாடலைப் பரிந்துரைத்தார். மேலும் பாடகி ஜிக்கிக்கு வாராய் நீ வாராய் போன்ற சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடும் வாய்ப்பினையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டமும், மத்திய அரசு பத்மபூஷன் விருதும் வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.