புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பார்த்து அவரது படங்களால் இன்ஸ்பிரேஷன் ஆகி திரைத்துறையில் கால்பதித்தவர் நடிகர் ராமராஜன். உதவி இயக்குநராக ராமநாராயணனிடம் பணியாற்றி பின்னர் சில படங்களை இயக்கினார். சொல்லிக் கொள்ளும்படியாக எந்தப் படமும் ஓடாததால் நடிக்க வந்தார். இயக்குநர் சீட் இவரை ஏமாற்றினாலும் ஹீரோ வேடம் இவருக்குக் கை கொடுத்தது. அப்போது முன்னணி நாயகர்களாக இருந்த ரஜினி, கமல், மோகன் ஆகியோரது படங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் ராமராஜன் படங்கள் ஓடியது.
இவரது பெரும்பாலான படங்களில் இளையராஜாவே இசையமைத்திருந்தார். எனவே ராமராஜனின் வெற்றிக்கு பெரிதும் இளையராஜாவின் பாடல்கள் காரணமாக இருந்தன. இந்நிலையில் பாடல்களாலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ராமராஜனுக்கு பழம்பெரும் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மூலமாக ஒரு செக் வந்தது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எம்.ஜி.ஆர்., சிவாஜியை வைத்து பல மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.
அதனால் இவர் இயக்கத்தில் நடித்தால் நாமும் பெரிய வெற்றியைப் பெறலாம் என்ற எண்ணத்தில் நடித்த ராமராஜனுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ராமராஜனை வைத்து இவர் இயக்கிய பார்த்தால் பசு என்ற படம் 1988-ல் வெளியானது. க்ரைம் திரில்லர் படமான இதில் ராமராஜனுக்கு வழக்கறிஞர் கதாபாத்திரம்.
கிட்டத்தட்ட 20 நாட்கள் ஷுட்டிங் முடிந்தவுடன் ராமராஜன் காட்சிகள் முடிவடைந்ததாக கோபாலகிருஷ்ணன் கூற அதிருப்தி அடைந்திருக்கிறார் ராமராஜன். படத்திற்கு இளையராஜா இசை. ஆனால் நமக்கு பாடல்கள் ஏதும் இல்லையே என்று சந்தேகப்பட்டு இயக்குநரிடமே கேட்க இது த்ரில்லர் படம்என்பதால் பாடல்கள் கிடையாது என்றிருக்கிறார் கோபாலகிருஷ்ணன்.
இளையாராஜா பாடல்களால் கிராமங்கள் தோறும் பிரபலமான ராமராஜன் இயக்குநரின் இந்த பதிலால் சற்று அதிருப்தி அடைந்தாலும் பழம்பெரும் இயக்குநர் என்பதால் அவரின் முடிவை ஏற்றுக் கொண்டு நடித்தார். அதன்பின் ராமராஜன் இனி எந்தப் பெரிய இயக்குநர்கள் படங்களிலும் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். மேலும் மணிரத்னத்துடன் இணையும் வாய்ப்பு கிட்டிய போதும் அந்த நேரத்தில் 5 சிறிய படங்களில் நடித்து மக்கள் நாயகனாகவே ஜொலிக்க விரும்பினார் ராமராஜன். மணிரத்னத்துடன் இணையவிருந்த அந்தப் படத்தில் ஹீரோயின் யார் தெரியுமா? ஸ்ரீ தேவி.