கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும் என்று சொலவடை ஒன்று உண்டு. இந்த சொலவடை யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ சூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. ஓவர் நைட்டில் ஹீரோ, சூப்பர் ஸ்டார் பட்டம் என அனைத்தும் வந்து அவரை இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக இன்று மாற்றியிருக்கிறது. இதனை அவரே ஒரு பேட்டியில் திறமை இருந்தால் மட்டும் போதாது அதிர்ஷ்டமும் வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இப்படி சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த சிவாஜி ராவை பாலச்சந்தர் அடையாளம் கண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வைத்தார். ஆனால் இவருக்குள் இருக்கும் மற்றொரு திறமையை அடையாளம் கண்டு அவரை ஹீரோவாகவும், சூப்பர் ஸ்டாராகவும் மாற்றியவர்தான் கலைஞானம்.
தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் கலைஞானம். பெரும்பாலும் சாண்டே சின்னப்பதேவர் படங்களில் திரைக்கதை ஆசிரியராகப் பணிபுரிந்த கலைஞானம் ஆறு புஷ்பங்கள், அல்லி தர்பார் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய ஆறு புஷ்பங்கள் படத்தில் விஜயக்குமார் ஹீரோவாக நடித்திருப்பார். செகண்ட் ஹீரோவாக ரஜினி நடித்திருப்பார். இந்தப் பட ஷுட்டிங்கின் போது ரஜினியின் மேனரிஸம், ஸ்டைல் என அனைத்தையும் கண்ட கலைஞானத்திற்கு ரஜினியை ஹீரோவாக வைத்து ஏன் படம் பண்ணக் கூடாது என்ற யோசனை பிறந்தது.
அதற்கு முன்பே சின்னப்ப தேவர் கலைஞானத்திடம் நீ எதுவும் சேர்த்து வைக்கவில்லை. ஏதாவது படம் இயக்கு நான் பைனான்ஸ் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து கலைஞானம் ரஜினியை வைத்து பைரவி படம் எடுக்கத் தயாராகிறார்.
ஆறு புஷ்பங்கள் படத்தில் நடித்த போது ரஜினிக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.7,000. அப்போது ராயப்பேட்டையில் ரஜினி தங்கியிருக்கிறார். இதனையடுத்து கலைஞானம் ஒரு ஸ்கிரிப்பிடை எடுத்துக் கொண்டு ரஜினியிடம் கொண்டு காட்டி அதனை படிக்கச் சொல்லியிருக்கிறார்.
சார் சூப்பரா இருக்கு என்று ரஜினி கூற இதில் நீங்கள் தான் ஹீரோ என்று கூறியிருக்கிறார் கலைஞானம். ரஜினிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. திக்குமுக்காடிப் போயிருக்கிறார். மேலும் உங்களது சம்பளம் இந்தப் படத்திற்கு ரூ.50,000 என்று கூற இன்ப அதிர்ச்சியாய் இருந்திருக்கிறது. 5000 அட்வான்ஸ் தருகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
தளபதி விஜய்யை அன்றே கணித்த விக்ரமன்.. பூவே உனக்காக பட ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்
அப்போது கலைஞானம் ரஜினிக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்காக தனது மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை அடகு வைத்திருக்கிறார். அது 4500 மட்டுமே தேறியது. மேலும் பணத்திற்கு தன் நண்பரிடம் 500 ரூபாய வாங்கி ரஜினிக்கு 5000 பணத்தினை அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார் கலைஞானம். இப்போது சின்னப்பதேவரிடம் செல்கிறார். கதை ரெடி, ஹீரோ ரெடி என்று கூற தேவர் யார் ஹீரோ என்று கேட்க, கலைஞானம் ரஜினியின் பெயரைச் சொல்ல உனக்கு அறிவிருக்கா என்று திட்டி பணம் தரமாட்டேன் நீ திரும்பவும் என்னிடம் வருவாய் என்று கூறியிருக்கிறார்.
வருத்தத்துடன் சென்ற கலைஞானம் அங்கும் இங்கும் அலைந்து பணத்தினை ஏற்பாடு தானே அந்தப் படத்தினைத் தயாரிக்கிறார். பைரவி படத்தினை பாஸ்கர் இயக்குகிறார். படம் வெளியாகிறது. அந்தப் படத்திலேயே இவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கப்படுகிறது. அப்போது எம்.ஜி.ஆரும், சிவாஜியும், கமலும் உச்சத்தில் இருக்கின்றனர். ஹீரோவாக நடித்த ஸ்ரீகாந்த் இந்தப் படத்தில் வில்லனாகிறார். இப்படி அனைத்துமே ரஜினிக்குச் சாதகமாக வந்து சுக்கிர திசை அடிக்க பைரவி வெளியாகிறது.
படம் சூப்பர் ஹிட் ஆனது. ரஜினியை ரசிகர்கள் ஏற்க ஆரம்பித்தனர். எந்த சின்னப்ப தேவர் கலைஞானத்தினை ஒதுக்கினாரோ அவரே மீண்டும் வந்து கலைஞானத்திடம் வருத்தம் தெரிவித்து ரஜினியின் கால்ஷீட்டை 3,4 படங்களுக்குப் பெறுகிறார். அப்படி உருவான படங்கள் தான் தாய் மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், ரங்கா போன்ற படங்கள். அன்று ரஜினிக்காக கலைஞானம் எடுத்த மிகப்பெரும் சவாலான காரியம் இன்று அவரை எந்த உச்சத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது என்று நாம் அனைவரும் அறிவோம்.