ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்தது போலவே முதல் பாதிக்கும் இரண்டாவது பாதிக்கும் நேர்மாறான பல்வேறு விஷயங்கள் நடந்து வருகிறது. முதல் சுற்றில் அதிக பலத்துடன் திகழ்ந்த அணிகள் எல்லாம் தற்போது ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறவே பெரும் பாடுபட்டு வருகிறது.
ஆனால் அதே வேளையில் முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஃப் டூ ப்ளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கடைசியாக ஆடிய 5 போட்டியில் அப்படியே வேறு ஒரு பரிமாணத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். தொடர் தோல்விகளால் துவண்டு போகாமல், சூப்பர் கம்பேக் கொடுத்த ஆர்சிபி, 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல் பிளே ஆப் சுற்றிற்கு முன்னேற வாய்ப்பு இல்லாமல் இருந்தவர்கள், அனைத்து அணிகளுக்கு எதிராக மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி உள்ளது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சொதப்பி வந்த பெங்களூர் அணி, கடைசி ஐந்து போட்டிகளில் இரண்டிலும் ஃபார்முக்கு வந்ததுடன் மட்டுமில்லாமல் ஃபீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் தங்களின் அணிகளில் இருந்த குறைகளை எல்லாம் சரி செய்து கொண்டு ஒரு சில போட்டிகளில் மட்டும் அதனை வெளிப்படுத்தாமல் அனைத்து போட்டிகளிலும் தங்கள் விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர்களை வீழ்த்துவதே எதிரணியினருக்கு சவாலான விஷயமாக உள்ளது.
அதிலும் குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, ஆர்சிபி தோல்வி அடைந்த போதிலும் வெற்றியடைந்த போதிலும் தனது நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதால் இந்த சீசனின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாகவும் உருவெடுத்துள்ளார். இதுவரை 13 போட்டிகளில் ஆடி 661 ரன்கள் எடுத்துள்ள அவர், இந்த சீசனில் 600 ரன்களை கடந்த ஒரே ஒரு வீரராகவும் உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் இவரது பேட்டிங் ஆடி நன்றாக ரன் சேர்த்த போதிலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்து வந்த நிலையில் கடந்த சில போட்டிகளாக அதற்கும் மிகப்பெரிய பதிலடி கொடுத்து சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களையும் பறக்க விட்டு வருகிறார். அப்படி இருக்கையில் தான் இந்த சீசனில் இதுவரை எந்த ஐபிஎல் சீசனிலும் செய்யாத விஷயத்தை விராட் கோலி தற்போது செய்து முடித்துள்ளார்.
அவர் இதுவரை முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த தொடராக இந்த சீசன் அமைந்துள்ளது. இதற்கு முன்பு வரை கடந்த 2023 ஆம் ஆண்டு, முதல் 6 ஓவர்களில் மொத்தமாக 301 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த விராட் கோலி இந்த சீசன் இன்னும் முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே 321 ரன்களை சேர்த்துவிட்டார்.
அது மட்டுமில்லாமல், முதல் ஆறு ஓவர்களில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இருந்ததும் இந்த சீசனில் தான். இதற்கு முன்பாக அதிகபட்சமாகவே கடந்த 2018 ஆம் ஆண்டு 139.5 ரேட் வைத்திருந்த விராட் கோலி நடப்பு சீசனில் 162.9 வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஸ்ட்ரைக் ரேட் மற்றும் தொடக்க வீரராக ரன்கள் அடித்து தாறுமாறு பதிலடியை கொடுத்துள்ளார் கோலி.