இன்று தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு நாயகனாக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அப்படியே ரஜினியின் ஃபார்முலாவினைப் பயன்படுத்தி குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களைக் கொடுத்து வசூல் நாயகனாகத் திகழ்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்த அளவிற்கு சிவகார்த்திகேயனை முதல்வரிசை நாயகனாக மாற்றிய படங்கள் இரண்டு. ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றொன்று ரஜினி முருகன். இந்த இரண்டு படங்களின் இயக்குநர் பொன்ராம். இவ்வாறு சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் இயக்குநர் பொன்ராம் மற்றும் டி.இமான் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர்.
இயக்குநர் பொன்ராம் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்து பின்னர் எம்.ராஜேஷிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இவர் முதன் முதலாக இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கதையை பிரபல ஹீரோ ஒருவரிடம் கூறியுள்ளார்.
அந்தப் படத்தின் கதையைக் கேட்ட அந்த ஹீரோ பொன்ராமின் கதை கழுவிக் கழுவி ஊற்றியுள்ளார். இதெல்லாம் ஒரு கதையா என்ற தொணியில் பேசியிருக்கிறார். இதனால் மனம் உடைந்த பொன்ராம் தனது சீனியர் இயக்குநர் ராஜேஷிடம் கூற, அவரும் ஆறுதல் சொல்லி பின்னர் உனக்கு எந்த ஹீரோ வேண்டும் என்று கேட்க, அப்போது பொன்ராம் சிவகார்த்திகேயனைக் கூற, அந்த தருணத்தில் இவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் மனம் கொத்திப் பறவை, 3, கேடிபில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்தப் படங்கள் முடிந்ததும் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தவர் பின்னர் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் எதிர்பார்த்ததற்கும் மேலான பெரும் வெற்றியைப் பெற சிவகார்த்திகேயனை அடுத்தடுத்து இயக்குநர்களும், தயாரிப்பளார்களும் மொய்க்க ஆரம்பித்தனர். இப்படி ஒரு ஹீரோ கழுவிக் கழுவி ஊற்றிய கதையை, சிவகார்த்திகேயன் தைரியமாக தேர்ந்தெடுத்து நடித்து மாபெரும் வெற்றிப் படமாக்கி தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக அவரை வருத்தப் படாத வாலிபர் சங்கம் உருவாக்கியது என்றால் அது பொன்ராமின் நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றியே.