சிறுத்தை படம் மூலம் தமிழில் அறிமுகமான சிவா அதற்கு முன் தெலுங்கில் இரண்டு படங்களை இயக்கியும், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவராகவும் விளங்குகிறார். இவர் சிறுத்தை படத்திற்குப் பின் அஜீத்தை வைத்து வீரம் படத்தினை இயக்கினார். வீரம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக தொடர்ந்து அஜீத் நடிப்பில் வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை இயக்கினார். இதில் வேதாளம் படம் கடந்த 2015-ல் வெளியானது.
இந்தப்படத்தில் அஜீத்துடன் லட்சுமிமேனன், ஸ்ருதி ஹாசன், தம்பி ராமையா, சூரி, கோவை சரளா ஆகியோர் நடித்திருப்பர். இதில் சூரி கால்டாக்ஸி ஓனராக வருவார். அப்போது அஜீத்தைப் பார்த்து உனக்கு கார் ஓட்டத் தெரியுமா என்று கேட்கும் போது தியேட்டரில் விசில் பறந்தது. இப்படி அஜீத்துடன் அந்தப் படம் முழுவதும் நடித்திருப்பார் சூரி.
ஒருமுறை இந்தப் பட ஷுட்டிங்கின் போது சூரிக்குப் பிறந்த நாள் வரவே, அப்போது அவரது குடும்பத்தினர் உங்கள் பிறந்த நாளில் அஜீத் சாரை பார்க்க கூட்டிச் செல்லுங்கள் என்று கேட்டிருக்கின்றனர்.
அப்போது சூரி அஜீத்திடம் இதை எப்படிக் கேட்பது? வேண்டாம் எனச் சொல்லிவிட்டால் தர்மசங்கடமாகிவிடுமே என்று கேட்காமலேயே இருந்திருக்கிறார். இருப்பினும் சூரியின் குடும்பத்தினர் வற்புறுத்தவே வேறுவழியின்றி அஜீத்தின் உதவியாளரிடம் தகவலைச் சொல்லியிருக்கிறார். உடனே அஜீத்தும் ஓகே சொல்ல தனது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக் கொண்டு அஜீத்தை சந்தித்திருக்கிறார் சூரி.
அப்போது சூரியின் மகன் அஜீத் அணிந்திருந்த கண்ணாடியைக் கேட்டு அழவே அஜீத் அதனைக் கழட்டிக் கொடுத்திருக்கிறார். குழந்தை உடனே அதை கீழே போட சூரி பயந்து போய் ஸாரி சார்..! என்று கூறியிருக்கிறார்.
அஜீத் சூரியிடம் பரவாயில்லை.. அதுதான் குழந்தை.. விளையாடட்டும் என்று கூறி மீண்டும் சூரியின் குழந்தையை தன் மடியில் தூக்கிக் வைத்துக் கொஞ்சியிருக்கிறார். அந்த நாள் மறக்க முடியாத நிகழ்வு என சூரி பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.