ரஜினியின் கெரியரையே தூக்கி நிறுத்திய படமாக அமைந்தது அண்ணாமலை மற்றும் பாட்ஷா போன்ற படங்கள். இந்த இரு படங்களும் ரஜினியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு பொருள் தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு இந்த இரு படங்கள் தான் தக்க பதிலடி கொடுத்தது. அந்த அளவுக்கு இந்த இரு படங்களுமே ரஜினியின் ஸ்டைல் மற்றும் நடிப்பு ஆகியவற்றை தெள்ளத் தெளிவாக காட்டியது.
அதிலும் ரஜினியை ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோவாகவும் காட்டிய படமாக அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய படங்கள் அமைந்தன. அப்படி இந்த படங்களை இயக்கிய பெருமைக்குரியவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. அண்ணாமலை படத்தை பொறுத்த வரைக்கும் இந்த படத்தை முதலில் இயக்க இருந்தவர் வசந்த். ஆனால் ஏதோ சில காரணங்களால் அண்ணாமலை படத்திலிருந்து வசந்த் வெளியேற சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்திற்குள் நுழைய வேண்டியதாக இருந்தது.
அதுவும் இவரை அழைத்து வந்தவர் பாலச்சந்தர். ரஜினி என்ற ஒரு மிகப்பெரிய ஹீரோவை வைத்து படம் எடுக்கப் போகிறோமே என்ற எந்த ஒரு பயமும் இல்லாமல் அசால்டாக வந்து வெற்றிவாகை சூடியவர் சுரேஷ் கிருஷ்ணா. அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் பாட்ஷா படம். இப்படி இந்த இரு படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் சுரேஷ் கிருஷ்ணா.
சமீபகாலமாக 80, 90களில் வெற்றி அடைந்த படங்களை ரீ ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் வேளையில் அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களும் ரீ ரிலீஸ் ஆகி சுரேஷ் கிருஷ்ணாவை மீண்டும் மக்கள் மத்தியில் ஞாபகப்படுத்தும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அவர் என்னுடைய வழியே வேறு என தனது ரூட்டை மாற்றி இருக்கிறார். ஆம் பெரிய பெரிய ஹீரோக்களை எல்லாம் விட்டுவிட்டு புது முகங்களை வைத்து ஒரு படத்தை தெலுங்கில் எடுத்துக் கொண்டிருக்கிறாராம் சுரேஷ் கிருஷ்ணா. அந்த படத்திற்கு ‘ஹீரோ ஹீரோயின்’ என பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல் அந்தப் படம் முழுவதுமாக சினிமாவைப் பற்றிய படமாக அமைய இருக்கிறதாம். அதனால் சுரேஷ் கிருஷ்ணா சினிமா மீதான தன்னுடைய அனுபவங்களை எல்லாம் சேர்த்து அந்த படத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.