உலக நாயகன் கமல்ஹாசன் பல திரைப்படங்களை கதை மற்றும் கால்ஷீட் காரணமாக நிராகரித்துள்ளார். ஆனால் அவ்வாறு அவர் நிராகரித்த படங்கள் வேறொரு நடிகர் நடித்து மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி அவர் மிஸ் செய்த திரைப்படம் தான் சீவலப்பேரி பாண்டி. இந்தப் படத்தில் கமலுக்குப் பதில் நடித்தவர்தான் நடிகர் நெப்போலியன். பாரதிராஜாவின் புது நெல்லு, புதுநாத்து படத்தின் மூலம் அறிமுகமான நெப்போலியன் ஆரம்பத்தில் கிழக்குச் சீமையிலே, எஜமான் போன்ற படங்களில் வில்லனாக நடித்து வந்தார்.
அப்போது நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் நெப்போலியனை கதாநாயகனாக வைத்து சீவலப்பேரி பாண்டி படத்தினை இயக்கினார். நெப்போலியனுக்கு முன்னதாக கமல் மற்றும் மம்முட்டியை நடிக்க முயற்சிகள் நடந்தது. 1994-ல் வெளிவந்த இத்திரைப்படம் நெல்லை சீமையில் சீவலப்பேரி பகுதியில் வாழ்ந்த பாண்டி என்ற போராளியின் வாழ்க்கை வரலாற்றினை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
இப்படத்தின் கதைக் கருவினை மட்டும் வைத்துக் கொண்டு கே.ராஜேஷ்வர் சினிமாவுக்காக சற்று மாற்றி எழுதினார். மேலும் சீவலப்பேரி பாண்டியின் வரலாறும் ஒரு இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. சௌபா என்ற எழுத்தாளர் நாவலாக எழுதியிருப்பார்.
நெப்போலியனுக்கு இந்தப் படம் அவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. படமும் வெற்றி பெற்றது. இதன் பிறகே நெப்போலியனுக்கு தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் கிடைத்து தொடர்ந்து கிராமத்து பாணியிலான படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இந்தப் படத்தினை அப்போது பார்த்த கமல்ஹாசன் நெப்போலியனைப் உச்சி நுகர்ந்து பாராட்டினாராம்.
அப்போது அவர் நெப்போலியனிடம், “இந்தப் படத்தின் கதை பத்திரிக்கைகளில் தொடர்கதையாக வந்துச்சு.. அதற்கேற்ற ஓவியங்கள் வரைஞ்சுருப்பாங்க. முதல்ல இந்தப் படம் என்கிட்ட தான் வந்துச்சு. நான் நடிச்சிருந்தாக் கூட இவ்வளவு சிறப்பா நடிச்சிருப்பேன்னான்னு தெரியாது. நீங்க நல்லா நடிச்சிருக்கீங்க..” என்று நெப்போலியனைப் பாராட்டினார்.
அன்று ஆரம்பித்த அவர்களின் நட்பு விருமாண்டி, தசாவதாரம் போன்ற படங்களிலும் தொடர்ந்தது. நெப்போலியனுக்காக தனி கேரக்டர் கொடுத்து அசத்தியிருப்பார் கமல்ஹாசன்.