சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திரையுலகில் கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினாலும் அவரை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தவர் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆவார். இதேபோன்று தான் உலகநாயகன் கமல்ஹாசனுக்கும்.
இவர்கள் இருவருக்கும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து சினிமாவில் நிலையான இடம் கிடைக்கச் செய்த இயக்குநர் எஸ்.பி. முத்துராமன். ஏ.வி.எம்-ன் ஆஸ்தான இயக்குநராக விளங்கிய எஸ்.பி. முத்துராமன் சொன்ன தேதியில் படப்பிடிப்பினை முடித்து ரிலீஸ் செய்து விடுவார். மேலும் குறித்த பட்ஜெட்டில் படங்களை எடுத்து பெரிய வெற்றிகளையும் கொடுப்பவர்.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ரஜினிக்காக மட்டும் கிட்டத்தட்ட 20-க்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். எனவே கே.பாலச்சந்தருக்கு அடுத்தபடியாக எஸ்.பி.முத்துராமனைத் தான் தனது திரையுலக குருவாக ரஜினிகாந்த் போற்றுகிறார். இவர்கள் கூட்டணி பல வெற்றிப் படங்களைக் கொடுக்க 1990-களுக்குப் பிறகு எஸ்.பி.முத்துராமன் திரைப்படங்கள் எடுப்பதைக் குறைத்துக் கொண்டார். ஒருகட்டத்தில் அவரது யூனிட்டில் உள்ள பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலா நிலை ஏற்பட்டது.
அப்போது ரஜினியிடம் எஸ்.பி.முத்துராமன் இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ள ரஜினியோ நீங்கள் ஒரு படத்தைத் தயாரியுங்கள் உடனே நடித்துக் கொடுக்கிறேன். மேலும் இந்தப் படத்திற்காக எனக்கு சம்பளம் எதுவும் வேண்டாம் என்று கூற, எஸ்.பி.முத்துராமனும் தனது சொந்த தயாரிப்பில் பாண்டியன் திரைப்படத்தை எடுத்தார்.
இளையராஜாவின் முதல் பாடல் பிறந்த கதை.. அன்னக்கிளியே உன்னைத் தேடுதே.. இப்படித்தான் உருவாச்சா?
1992-ல் வெளியான பாண்டியன் திரைப்படத்தில் ரஜினி, குஷ்பு, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இது கன்னடத்திரைப்படமான பாம்பே தாதா என்ற படத்தின் ரீமேக் ஆகும். இப்படி குறைந்த பொருட் செலவில் குறுகிய காலத்தில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டது வெளி வந்தது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட் ஆகின. படம் ஓரளவிற்கு வெற்றி கண்டது.
இந்தப் பட ஷுட்டிங்கின் போது இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் மனைவி காலமாகி விட்டார். ஏற்கனவே பண நெருக்கடியால் திண்டாடியவருக்கு அவரின் மனைவி இழப்பானது பேரிடியாகத் தாக்கியது. எனவே ரஜினி உள்ளிட்டோர் ஷுட்டிங்கை சிறிது காலத்திற்கு தள்ளி வைக்கலாம் என யோசனை தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்காத எஸ்.பி. முத்துராமன் அவர் மனைவி இறந்த ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஷுட்டிங் வந்து மளமளவென பணிகளைக் கவனிக்க ஆரம்பித்தார்.
ஒரு பெரும் சோகத்தையே தன்னுள் புதைத்துக் கொண்டு மீண்டும் வந்த அவரின் மன உறுதியும், தன்னம்பிக்கையும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இவ்வாறு அனைத்து பணிகளும் முடிந்து இறுதியாக பாண்டியன் படம் 1992-ல் தீபாவளி அன்று வெளிவந்தது. அப்போது தேவர் மகனும் ரேஸில் இணைந்ததால் பாண்டியன் சுமாராக மட்டுமே ஓடியது. மேலும் இந்தப் படத்தின் மூலம் கிடைத்த வசூல் எஸ்.பி.முத்துராமனின் குழுவினரின் ஓய்வூதிய நிதியாக அளிக்கப்பட்டது. இதுவே எஸ்.பி.முத்துராமன் இயக்கிய கடைசி படமாகும். இதற்கு அடுத்தாக தமிழக அரசுக்காக பெண் சிசுக்கொலை தடுத்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தொட்டில் குழந்தை என்ற பிரச்சாரப் படத்தினை 1995-ல் இயக்கினார்.