சித்திரை திருவிழா என்றாலே நமக்கு நியாபகம் வருவது மதுரை தான். மீனாட்சி திருக்கல்யாணத்தில் ஆரம்பித்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வரை பத்து நாட்கள் மதுரை முழுவதுமே திருவிழா கோலம் கொண்டிருக்கும்.
சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் ஒருகூடி நடத்தும் திருவிழா இந்த சித்திரை திருவிழா. லட்சக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவில் கலந்துக் கொள்வர். இது வருடம்தோறும் நடக்கும் நிகழ்வு என்றாலும் இந்த சித்திரை திருவிழாவிற்கு காத்திருப்பர் மதுரைவாசிகள். அத்துணை சிறப்பு வாய்ந்தது இந்த சித்திரை திருவிழா.
மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது பெண்கள் புது மஞ்சள் கயிற்றை தங்கள் தாலியுடன் இணைத்துக் கொள்வர். மறுநாள் தேரோட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடக்கும். இந்த கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கான காரணம் மற்றும் வரலாறு என்னவென்பதைப் பற்றி இனி தெரிந்துக் கொள்வோம்.
தன் தங்கை ஸ்ரீமீனாட்சிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீஅழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார். வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்துடன் வைகையில் எழுந்தருகிறார் என்கிறது புராண கதை.
அது ஓரு புறம் இருக்க, சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் ‘மண்டூகோ பவ’ என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, ‘விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்’ என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினம் அணிவிக்கப்படும்.
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது – கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும் என்கின்றனர்.