கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் உலகப்பிரசித்திப் பெற்றது. உலகெங்கிலும் உள்ள பக்தகோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரவசப்பட்டு வருகின்றனர். வர முடியாதவர்கள் இணையதளங்களிலும், டிவிகளிலும் கண்டு மகிழ்கின்றனர்.
ஆண்டுதோறும் கள்ளழகர் எந்தப் பட்டை உடுத்தி இறங்குகிறாரோ அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பது ஒரு ஐதீகம். இந்த ஆண்டு எந்தப் பட்டு உடுத்தி இறங்குகிறார்? அதற்கு என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
தல்லாகுளத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடுகிறார் கள்ளழகர். சுந்தரம் என்றாலே அழகு. அதனால் தான் அவரது பெயர் சுந்தரநாச்சியார்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் அந்தப் பட்டைத் தேர்ந்தெடுப்பவர் தலைமைப் பட்டர். அழகர் உடுத்தும் ஆடைகளும், அணிகலன்களான தங்க நகைகள் மற்றும் ஆபரணங்கள் ஒரு பெரிய மரப்பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கும். அதற்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா என்ற வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும்.
அதைத் தலைமைப் பட்டர் பெட்டிக்குள் கையை விட்டு எடுக்கும் போது என்ன பட்டு வருகிறதோ அது தான் கள்ளழகர் உடுத்தும் பட்டு. அந்த வகையில் பச்சைப்பட்டு உடுத்தி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பல ஆண்டுகளாக இந்தப் பச்சைப்பட்டை உடுத்தித் தான் கள்ளழகர் ஆற்றில் இறங்கியுள்ளார்.
அரகரா கோஷம் முழங்க கோவிந்தா கோவிந்தா என்று பக்தர்கள் முழங்கினர். தங்கக்குதிரையில் கள்ளழகர் இந்த ஆண்டும் பச்சைப் பட்டு உடுத்தித் தான் இறங்கியுள்ளார். இந்த ஆண்டு முழுவதும் நமக்கு செல்வ செழிப்பாக இருக்கும். மழை பொழிந்து நாட்டைக் காக்கும் என்று நம்புவோம்.
இன்று பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபம் செல்கிறார். அதன்பிறகு இரவு 9 மணிக்கு வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் எழுந்தருள்கிறார். நாளை அதிகாலை 6 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு சேஷ வாகனத்தில் புறப்பட்டு காலை 11 மணிக்கு தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அதன்பின்னர் பிற்பகல் 3 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் தருகிறார். இரவு 11 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் விடியவிடிய தசாவதாரம் நடைபெறுகிறது.
மறுநாள் இரவு 11 மணிக்கு தல்லாகுளம் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் மண்டபத்தில் திருமஞ்சனம், கள்ளழகர் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதன்பிறகு கருப்பண்ணசாமி கோவிலில் பிரியாவிடை பெற்று அழகர் மலை புறப்படுகிறார்.