தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60. சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பு. 14.4.2024ல் வருகிறது. இது குரோதி ஆண்டாகப் பிறக்கிறது. இந்த ஆண்டுக்கு மட்டும ஏன் இவ்வளவு பயம் காட்டுறாங்க… குரோதம், பகை, கொள்ளை, இயற்கை சீற்றங்கள் நடக்கும் என்று சொல்வதால் தான் இந்தப் பயம். கொரோனாவும் கடுமையான காலம் தான்.
நம் வாழ்வில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிக்க முன்னோர்கள் வழிகாட்டியிருக்காங்க. இந்த ஆண்டு நமக்கு நல்ல ஆண்டாக அமைய தெய்வ வழிபாட்டுடன் தொடங்க வேண்டும். முதல்நாளே சுத்தம் செய்து பூஜைக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்ளுங்கள். முக்கியமாக மா, பலா, வாழைப்பழத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.
வெற்றிலைப்பாக்கு, எலுமிச்சம்பழம், சிறிது மலர்கள், கொஞ்சம் பணம், நாணயங்கள், தங்க நகை, வெள்ளிக்காசு என ஏதாவது ஒன்றை பூஜைத் தாம்பாளத்தில் வைத்துக்கொள்ளலாம். இதை புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்ததும் கண்ணாடியில் பார்த்து கனி காணுதல் பாருங்கள். மஞ்சள், குங்குமம் ஆகிய மங்கலப்பொருள்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இதை முந்தைய நாள் இரவே தயார் செய்து கொள்ளுங்கள்.
படுக்கும் அறையில் தாம்பாளத்தில் வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் பார்க்கும் இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு இந்த ஆண்டு எங்களை இந்த நல்ல காட்சியைப் பார்க்க வைத்த இறைவா, இந்த ஆண்டு முழுவதும் நலமாக அமைய வேண்டும் என்று இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் வேண்டிக்கொள்ளுங்கள்.
குடும்பத்தில் உள்ள எல்லோரையும் இப்படி பார்க்கச் செய்யுங்கள். இதையே சாமிக்கு நைவேத்தியமாக வைத்துக் கொள்ளலாம். பாயாசம், பதார்த்தங்களும் வைத்துக் கொள்ளலாம். நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். உங்களது நகையை எடுத்துப் போட்டுக்கலாம். அன்றைய நாள் மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றை வாங்கி பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.
பூஜை செய்த பின் நகை, பணத்தை உங்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் போட்டு இறைவனிடம் இந்த ஆண்டு எனக்கு நிறைய செல்வ வளத்தைக் கொடு என்று வேண்டிக் கொள்ளுங்கள். காலை 7.50 மணி முதல் 9 மணி வரையும், 10 மணி முதல் 11.15 மணி வரையும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்தக் கனி காணுதலை எல்லோருமே காணலாம்.
இந்தக் குரோதி ஆண்டின் ராஜாவாக செவ்வாய் வருகிறார். செவ்வாய் என்றாலே சூடு. அதனால் தான் விபத்துக்களும், தீயினால் ஏற்படும் ஆபத்துக்களும் அதிகமாக இருக்கும். அவருக்கு மந்திரியாக வரக்கூடியவர் சனிபகவான். அதனால் தான் எல்லாருக்கும் இந்தப் பயம் வருகிறது. முதலில் எல்லோருக்கும் தலைவனான சிவபெருமானை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்.
முருகப்பெருமானின் அருள் நமக்கு இருந்தால் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். அதனால் முருகப்பெருமானின் வழிபாட்டை மேற்கொள்ளலாம். சனிபகவானின் பிரச்சனையில் இருந்து விடுபட ஆஞ்சநேயரை இறுகப்பற்றுங்கள். விபத்துக்களில் இருந்து மீள பைரவர், நரசிம்ம மூர்த்தியை வழிபடுங்கள். ராகு, காலத்தில் அம்பிகையை வழிபட்டால் அதன் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். குலதெய்வம், இஷ்ட தெய்வத்தை வழிபட எந்த வித பிரச்சனைகளுக்கும் நாம் பயப்படத் தேவையில்லை.
அன்னதானம் செய்வது நம் வினைகளின் அளவைக் குறைத்து நம்மைக் கைதூக்கி விடக்கூடியது தான் இந்த அன்னதானம். அதனால் அன்றைய தினம் மறக்காமல் செய்து எல்லா வளமும், நலமும் பெறுங்கள். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.