இயக்குநர் முத்தையா படங்கள் என்றாலே பெரும்பாலும் கிராமும் அல்லாது நகரமும் அல்லாது ஒரு சிற்றூர் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட சமூகம். அதே சமூகப் பின்னணி கொண்ட ஹீரோ, வில்லன் என இடம்பெற்றிருக்கும். இதன் காரணமாகவே முத்தையாவின் படங்கள் என்றாலே அது இப்படித்தான் என்ற முத்திரை விழுந்தது. குட்டிப்புலி, கொம்பன், மருது, விருமன், தேவராட்டம், புலிக்குத்திப் பாண்டி, காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் போன்ற படங்கள் அனைத்தும் ஒரே சாயலாக எடுக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு சாதிரீதியாக எடுக்கப்படும் படங்களை திரைப்பட தணிக்கைக்குழு சற்று கூடுதல் கவனம் எடுத்துப் பார்த்து அதற்கேற்ப சான்றிதழை வழங்கும். இதில் முத்தையா நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய கொம்பன் படத்திற்கு தணிக்கைக் குழுவில் ஏகப்பட்ட கத்தரி போடப்பட்டிருக்கிறது. 2015-ல் வெளியான கொம்பன் படத்தில் கார்த்தியுடன் லட்சுமி மேனன், ராஜ்கிரன், சூப்பர் சுப்புராயன், கோவை சரளா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இராமநாதபுரத்து வட்டார வழக்கிலும் அந்த மண் சார்ந்த பின்னனியிலும் படம் எடுக்கப்பட்டிருந்தது.
பாய்ஸ் படத்தில் ஐவரில் ஒருவராக நடிக்க இருந்தது இவரா? இப்போது சினிமாவில் கலக்கும் பன்முக நாயகன்
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து தணிக்கைச் சான்று பெறுவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறது. அப்போது தணிக்கைக்குழுவின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக இருந்தவர் எஸ்.வி.சேகர். படத்தைப் பார்த்த எஸ்.வி.சேகர் ஒரு கணம் அதிர்ந்து போயிருக்கிறார். அதில் இராமநாதபுரம் முதுகுளத்தூர் கலவரத்தினை மையமாக வைத்து சில காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அங்கு நிலவும் சாதி பிரச்சினையையும் மையமாக வைத்து சில காட்சிகள் இருக்க எஸ்.வி.சேகர் தலைமையிலான தணிக்கைக் குழு கொம்பன் படத்திற்கு 96 இடங்களில் பீப் ஒலியும், 36 இடங்களில் கத்தரியும் போட்டிருக்கிறது.
அதன்பிறகு படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டு வெளியானது. இந்தப்படத்தினை ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். கொம்பன் படம் வெளியாகி பரவலான வெற்றியைப் பெற்றது. மேலும் முத்தையாவின் வழக்கமான சினிமா இலக்கணப்படியும் படம் அமைந்திருந்தது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக விருமன் படத்தில் மீண்டும் இவர்கள் கூட்டணி இணைந்தது. இதனை சூர்யா தயாரித்திருந்தார். இயக்குநர் ஷங்கரின் மகளை ஹீரோயினாகவும் அறிமுகம் செய்தார் இயக்குநர் முத்தையா.