பாய்ஸ் படத்தில் ஐவரில் ஒருவராக நடிக்க இருந்தது இவரா? இப்போது சினிமாவில் கலக்கும் பன்முக நாயகன்

இயக்குநர் ஷங்கர் அதுவரை பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கி மாபெரும் வெற்றிகளைக் கொடுத்த பின்பு முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்கிய படம் தான் பாய்ஸ். கடந்த 2003-ல் வெளியான பாய்ஸ் படத்தில் சித்தார்த், ஜெனிலியா, நகுல், பரத், விவேக், தமன், மணிகண்டன் ஆகியோர் நடித்திருந்தனர். ஆண் பிள்ளைகளுக்கு பதின்ம வயதில் ஏற்படும் எமோஷனல்களைக் வைத்து அவர்கள் வாழ்வில் எப்படி தடுமாறுகிறார்கள் பின் அதிலிருந்து எப்படி மீண்டு வாழ்வில் ஜெயிக்கிறார்கள் என்பதை ஷங்கர் தனது பார்முலாவான பிரம்மாண்டம், சுஜாதா, ஏ.ஆர்.ரஹ்மான் என பட்டையைக் கிளப்பியிருந்தார். பாய்ஸ் படம் பல எதிர்ப்புகளைச் சந்தித்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

மேலும் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு பாடல் காட்சிக்காக 62 கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட படமும் இதுவே. இதுமட்டுமல்லாது பாடல்கள் அனைத்திலும் ஷங்கர் மிகவும் மெனக்கெட்டு புதுமையாகக் கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் புதுமுகமாக நடித்தவர்களில் மணிகண்டனைத் தவிர அனைவரும் முன்னணி நாயகர்களாகவும், தமன் புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும், ஜெனிலியா முன்னணி ஹீரோயினாக வலம்வந்து தற்போது திருமணம் முடிந்து செட்டிலும் ஆனார்கள். சித்தார்த், பரத், நகுல் போன்றோர் நல்ல படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.

பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற இந்த ஐவர் கூட்டணியில் ஒருவராக இடம்பெற ஷங்கர் முதலில் யோசித்தது ஜி.வி.பிரகாஷ்குமாரைத் தான். ஆனால் அப்போது ஜி.வி.பிரகாஷ்குமார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். மேலும் அவருடைய தொடர்பும் சரியாகக் கிடைக்காமல் விட்டுவிட்டதால் அவருக்குப் பதிலாக மற்றொருவரைத் தேர்வு செய்திருக்கிறார்.

தன்னுடைய சொந்தப் பணத்தில் மற்ற பிரபலங்களுக்காக புகழ் தேடிய ஜெய்சங்கர்.. ஏன் தெரியுமா? இப்படி ஒரு மனசா?

ஜி.வி.பிரகாஷ்குமார் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலைப் பாடியிருப்பார். அப்போதிருந்து இயக்குநர் ஷங்கருக்கு ஜி.வி.பிரகாஷ்குமாரை எப்படியாவது தனது படங்களில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அதன்படி பாய்ஸ் படத்தில் இவரைத் தேர்ந்தெடுக்க அச்சமயம் அது முடியாமல் போயிருக்கிறது. இத்தகவலை அந்நியன் படத்திற்காக ‘காதல் யானை’ பாடலை பாடப் போன ஜி.வி.பிரகாஷிடம் ஷங்கர் கூறியிருக்கிறார்.

ஆனால் அதன்பிறகு இயக்குநர் ஷங்கர் தனது தயாரிப்பில் தனது உதவியாளரான இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய முதல்படமான வெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து மளமளவென தனது திறமையால் வளர்ந்த ஜி.வி.பிரகாஷ்குமார் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews