இளையராஜாவிடம் தேவா பாட்டு போல் கேட்ட கே.எஸ்.ரவிக்குமார்.. பதறிப்போன ஏ.வி.எம் சரவணன்!

By John A

Published:

தமிழ் சினிமா உலகில் புரியா புதிர் திரைப்படம் மூலம் அறிமுகமாகி வெற்றிகரமான இயக்குநராக உருவெடுத்தவர்தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி ஹீரோக்களையும் வைத்து கமர்ஷிய படங்களைக் கொடுத்து பெரும்பாலான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

இவர் இயக்குநராகி சில ஆண்டுகள் கழித்து 1994-ல் ஏ.வி.எம் தயாரிப்பில் சக்திவேல் என்ற படத்தினை இயக்கினார். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. செல்வா, கனகா ஆகியோர் நடித்திருந்தனர். இப்போதும் சூப்பர் ஹிட் ஜோடிப் பாடலாக இருக்கும் மல்லிகை மொட்டு.. மனசைத் தொட்டு பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றதே.

பொதுவாக இளையராஜாவிடம் பாடல் கம்போஸிங்-க்கு செல்லும் போது காட்சியை மட்டும் சொல்லி விட்டால் போதும். அவரே அதை பாடல் மூலம் அடுத்த லெவலுக்குக் கொண்டு சேர்த்து விடுவார். ஆனால் எனக்கு இந்த மாதிரி பாடல் வேண்டும் என்று கேட்டால் கோபப்படுவராம். இதே போன்ற ஒரு சம்பவம் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் நடைபெற்றது. சக்திவேல் படத்தில் பாடலுக்காக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும், ஏ.வி.எம் சரவணனும் இளையராஜாவின் ஸ்டுடியோவிற்காகச் சென்றுள்ளனர்.

கையில் சிகரெட்டுடன் கண்ணதாசன்.. டென்ஷனில் இருந்த இளையராஜா.. கூல் ஆக்கிய சூப்பர் ஹிட் பாடல்

அப்போது இளையராஜா எந்த மாதிரி டியூன் வேண்டும் எனக் கேட்க, கே.எஸ்.ரவிக்குமார் அதற்கு முன்னர் தான் இயக்கிய புருஷ லட்சணம் படத்தில் வந்த ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன்.. என்ற பாடல் போல் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். ஏனெனில் அந்தப் பாடல் தேவா இசையமைத்தது. அப்போது இளையராஜாவுக்கு மாற்றாக தேவா உருவாகிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமாரை வெளியே அழைத்து வந்த ஏ.வி.எம் சரவணன் ஏன் இப்படி அவரிடம் தேவா பாட்டைப் போல் வேண்டும் என கேட்டீர்கள்.. அவர் கோபித்துக் கொள்வார் எனச் சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் ஸ்டுடியோவிற்குள் நுழைந்த கே.எஸ்.ரவிக்குமாரிடம் காட்சியைச் சொல்லுங்கள். எந்த மாதிரி பாடல் வேண்டும் எனக் கேட்க, உடனே முன்னர் சொன்னதை மாற்றி மாங்குயிலே.. பூங்குயிலே பாடல் போல் வேண்டும் என்று கேட்க, இளையராஜா ஹிட் பாடலான மல்லிகை மொட்டு.. மனசைத் தொட்டு பாடலின் டியூனை போட்டுக் கொடுத்திருக்கிறார்.