நம்ம மும்தாஜா இது.. 90‘s Kids-ஐ கவர்ச்சியால் கிறங்க வைத்த நடிகையின் தற்போதைய நிலை

By John A

Published:

2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் அறிமுகமான ஒரு நடிகை தனது கவர்ச்சியாலும், அழகாலும் அப்போதுள்ள இளசுகளைக் கிறங்க வைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தார். அவர்தான் மும்தாஜ். டி.ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனலிசா படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான மும்தாஜ் அந்தப் படத்தில் தனது கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போட்டார்.

அதன்பின் வெளியான மலபார் போலீஸ் திரைப்படத்தில் அப்பாஸ் ஜோடியாக ‘என் கண்ணாடி தோப்புக்குள்ளே‘ என்ற பாடல் மூலம் பிரபலம்  ஆனார். அதனைத் தொடந்து குஷி படத்தில் விஜய்யுடன் இவர் குத்தாட்டம்போட்ட கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் இளசுகளை ஜிவ் என்று இழுக்க தமிழ் சினிமாவின் உச்சத்தில் சென்றார்.

தொடர்ந்து பட்ஜெட் பத்மநாபன், சொன்னால் தான் காதலா, உனக்காக எல்லாம் உனக்காக போன்ற பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். அனைத்துப் படங்களிலும் கவர்ச்சி வேடங்களிலேயே நடித்து வந்தால் இவருக்கு தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் படங்கள் ஏதும் அமையவில்லை. இயக்குநர்களும் வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே மும்தாஜை பயன்படுத்திக் கொண்டனர்.

தொடர்ந்து இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்து தென்னிந்தியாவையே தனது கவர்ச்சியால் கிறங்கடித்தார். இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்துள்ள மும்தாஜ் நம்ம குஷி மும்தாஜா என்று கேட்கும் அளவிற்கு தனது பின்பற்றும் இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கைகள் படி பர்தா அணிந்து முழு இஸ்லாமிய பெண்ணாக மாறியிருக்கிறார்.

நாட்டுப்புறப் பாட்டை கேட்டு வளர்ந்து பின்னாளில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கே பிதாமகனாக விளங்கிய இசை மேதை.. யார் இந்த சலீல் சௌத்ரி?

இதுகுறித்து அந்த பேட்டியில் மும்தாஜ் கூறுகையில், “ நீச்சல் உடையில் நடித்துக் கொண்டிருந்த  நான் இன்று எனது மத மார்க்கத்தில் முழுவதுமாக திரும்பி விட்டேன். எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் ஒரு திருப்பம் வரும். அதுபோல் தான் எனக்கும். எனது 25 வயதிற்கு மேல் என்னுடைய உடல் நிலை சரியில்லாத காரணத்தால் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து விட்டேன்.

அந்த நேரத்தில் தான் அல்லாவை முழுமையாக உணர்ந்தேன். திருக்குரானை பின்பற்றத் தொடங்கினேன். அதனை முழுமையாகப் படித்து இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றத் தொடங்கினேன். இது அல்லாஹ் எனக்குக் கொடுத்த மறுவாழ்வு“ என்று அந்தப் பேட்டியில் உருக்கமாகப் பேசியிருக்கிறார் மும்தாஜ்.

மும்தாஜின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்தாஜின் இந்த மாற்றத்தை பலரும் வரவேற்று பாராட்டி வருகிறார்கள்.