இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் புகழப்படுபவர்தான் நடன இயக்குநரும், நடிகருமான பிரபு தேவா. நடன இயக்குநர் சுந்தரத்தின் மகனான இவர் சிறுவயதிலிருந்தே தந்தையைப் போல் நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு தந்தையுடன் ஷுட்டிங் சென்று பல நடனக் கலையைக் கற்றுத் தேர்ந்தார். மேலும் பள்ளிப் பருவத்திலேயே பரத நாட்டியத்தின் அனைத்து முறைகளையும் கற்றுத் தேர்ந்து வியப்பில் ஆழ்த்தியவர்.
இன்று நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என திரைத்துறையில் பன்முகம் காட்டி வருகிறார். நடன இயக்குநராக தனது பணியை ஆரம்பித்தவர் சில படங்களில் முகம் காட்டத் தொடங்கினார். இவரது நடித்த முதல் பாடல் இதயம் படத்தில் இடம் பெற்ற ஏப்ரல் மேயிலே என்ற பாடல்தான். அதன்பின் சூரியன் படத்தில் லாலாக்கு டோல் டப்பிமா, வால்டர் வெற்றிவேல் படத்தில் இடம்பெற்ற சின்னரோசாவே, ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே போன்ற பாடல்களின் மூலம் கவனம் ஈர்த்தார். ஒரு பாடலுக்கு நடனமாடிய பிரபுதேவாவிற்கு இந்து படத்தின் மூலம் ஹீரோ வாய்ப்பு அமைய அதிலும் தன் திறமையைக் காட்டினார்.
வெகுளியான நடிப்பிற்கு பெயர்போன பிரபுதேவா நடனத்தில் வெளுத்து வாங்கி விடுவார். அதன்பின் ஷங்கர் இயக்கிய காதலன் படம் இவரை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தியது. அதன்பின் போக்கிரி படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். இவ்வாறு தனது திறமையால் சிறுவயதிலிருந்தே கமல்ஹாசன் போல் சினிமா துறையில் தடம் பதித்து இன்று தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகர்கள் வரிசையில் இருக்கிறார் பிரபுதேவா.
இந்நிலையில் தனது 15 வயதிலேயே உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஒரு பாடலுக்கு அவருக்கு நடனம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். அடிப்படையில் நடன இயக்குநரான கமல்ஹாசனும், பிரபுதேவாவின் இந்தத் திறமையைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வெற்றி படத்தில் நடன இயக்குநராகப் பணியாற்றியவர் சுந்தரம் மாஸ்டர். ஒரு பாடலுக்கு அவரால் நடனம் அமைக்க முடியாத சூழ்நிலையில் தனது தந்தையின் பொறுப்பினைக் கையில் எடுத்து கலக்கியுள்ளார் பிரபுதேவா. அந்தப் பாடல்தான் கமல்ஹாசன், டிஸ்கோ சாந்தி நடனமாடிய தத்தோம் தலாங்க தத்தோம்.. என்ற பாடல்.