இன்று திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிகம் கவர்ந்து வருவதாக இருந்தாலும், அதற்கு ஈடாக சின்னத்திரையில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளும் கூட பெரிய அளவில் பெயர் எடுத்திருக்கும். அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த லொள்ளு சபா நிகழ்ச்சியை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. பிரபலமான தமிழ் சினிமாக்களை எடுத்து தங்களது ஸ்டைலில் ஸ்பூப் வீடியோ போல செய்யும் இந்த நிகழ்ச்சியில் நடித்து இன்று தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் சந்தானம்.
அவரை போலவே, லொள்ளு சபா நிகழ்ச்சியில் வந்த பலரும் இன்று திரைத்துறையில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கின்றனர். அதில் நடிகர் மனோகரும் முக்கியமான ஒருவர் தான். விஜய் டிவியில் லொள்ளுசபா மூலம் அறிமுகமான மனோகர், அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு ’காதல் எப்.எம்’ திரைப்படம் மூலம் காமெடி நடிகராக தமிழ் திரையுலகில் என்ட்ரி ஆனார். அதன் பிறகு மாஞ்சா வேலு, தம்பிக்கு இந்த ஊரு போன்ற படங்களில் நடித்தார்.
இதனையடுத்து விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்தில் சேட்டு என்ற காமெடி வேடத்தில் கலக்கினார் மனோகர். பின்னர் கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன், ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
விசுவின் ‘மணல் கயிறு’ படத்தின் இரண்டாம் பாகமான ’மணல் கயிறு 2’ படத்தில் அவர் பேட்டி எடுக்கும் நிருபராக நடித்திருந்தார். சராசரியாக வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து படங்களில் காமெடி வேடத்தில் நடித்த மனோகர், கடந்த ஆண்டு வெளியான நான்கு படங்களில் நடித்துள்ளார். பல்லு படாம பாத்துக்கோ, கருங்கல்பாளையம், டிடி ரிட்டன்ஸ் மற்றும் தில்லு இருந்தா போராடு போன்ற படங்களில் நடித்தார்.
மேலும் லொள்ளு சபாவை அடுத்து காமெடி படம் ,மாமா மாப்பிள்ளை, சுட்ட கதை உள்ளிட்ட தொலைக்காட்சி ஷோக்களில் நடித்துள்ளார். நடிகர் லொள்ளு சபா மனோகர், தற்போது 69 வயதாக இருக்கும் நிலையிலும் இன்னும் சில படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். கையை சுழற்றி இழுத்து இழுத்து மனோகர் பேசும் வசனத்திற்கே ஒரு பிரத்யேக ரசிகர் கூட்டம் உள்ளது.
சென்னை ராயபுரத்தில் பிறந்து வளர்ந்த மனோகர், மிகச் சிறிய வீட்டில் தான் இன்றும் வசிக்கிறார். வாழ்க்கையில் டென்ஷன் படக்கூடாது என்றும் குழந்தைகளுக்கு எப்போதாவது டென்ஷன் பிரஷர் வந்தா கூட அதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் எந்த விஷயத்துக்கும் டென்ஷனாக மாட்டேன் என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதேபோல் என்னை திரையில் பார்க்கும் ரசிகர்கள் டென்ஷன் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை எனது ஆசை என்றும் அவர் கூறியுள்ளார்.
பத்தாம் வகுப்பில் பெயில் ஆகி விட்ட பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அவருக்கு கார்ப்பரேஷன் வங்கியில் ஒரு சின்ன வேலை கிடைத்தது. ஆனால் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் அதற்கு முயற்சி செய்ததாகவும் அப்போதுதான் லொள்ளு சபா வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் இன்னொரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கூட தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மனோகர் பற்றி பேசியிருந்த சந்தானம், அவர் மிகவும் வெள்ளந்தியான மனிதர் என்றும், போனில் கம்பெனி மெசேஜ் வந்தால் அதற்கும் ரிப்ளே செய்து கொண்டிருப்பார் என்றும் தெரிவித்திருந்தது ரசிகர்களையும் கூட வெகுவாக கவர்ந்திருந்தது.