இரட்டிப்புப் பலன் தரக்கூடியது மாசி மகம். பொதுவாக எந்த ஒரு பண்டிகையைப் பற்றிப் பேசினாலும் அதை ஒவ்வொரு தெய்வத்திற்கும் தொடர்புபடுத்துவோம். பிரதோஷம், சிவராத்திரின்னா சிவபெருமான், ஆடிப்பூரம்னா அம்பிகை, கந்த சஷ்டின்னா முருகன், வைகுண்ட ஏகாதசின்னா பெருமாள் என ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு கடவுளுடன் தொடர்புபடுத்துவோம்.
இந்த மாசி மகத்துல எல்லா தெய்வங்களுக்கும் சிறப்பு உண்டு. அதனால் இது இரட்டிப்புப்பலன் தரக்கூடியது. அதே போல மறுபிறப்பையும் இல்லாமல் ஆக்கும் ஒரு உன்னதமான நாள் இது.
சிவபெருமான் வருணனுக்கு சாபத்தை நீக்கி அவருக்கு வரமளித்து அவரைக் காப்பாற்றிய ஒரு அற்புதமான நாள். அதனால் தான் இந்தநாளில் நதித்துறைகளில் போய் நீராடும் போது நமக்கும் அதீத புண்ணிய பலன்கள் கிடைக்கிறது.
அதனால் தான் இந்த நாளில் எல்லா கோவில்களிலும் தெப்போற்சவம் கொண்டாடப்படுகிறது. முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணத்தை இந்த நாளில் செய்தால் அது அதிவிசேஷமான பலனைத் தரும். பொதுவாக தர்ப்பணம் அமாவாசை தானே என கேட்கலாம். பௌர்ணமியும் உகந்த நாள். அதிலும் மாசி மக பௌர்ணமி ரொம்பவே சிறப்பு.
இதுபோல கடலில் குளிப்பதை கடலாடுதல் என்பர். குலதெய்வ வழிபாட்டுக்கும் மிகவும் சிறப்புவாய்ந்த நாள். கங்கை, காவிரி போன்ற நவநதிகளின் பாவத்தையும் சிவபெருமான் போக்கிய நாள் தான் இந்த மாசி மகம். அதனால் தான் கும்பகோணத்தில் மகாமக குளமே அமையப்பெற்றது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவது மகாமகம்.
ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவது மாசிமகம். இந்தநாளில் நதிகளே வந்து அங்கு நீராடி தன்னுடைய பாவங்களைப் போக்கிக் கொள்கிறது. அம்பிகை தாட்சயணியாக அவதாரம் எடுத்த நாள். முருகப்பெருமானுக்கும் உகந்த நாள். சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை முருகன் உபதேசித்த நாள்.
இந்த நாளில் விரதம் இருந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். திருக்கோஷ்டியூரில் மாசி மகத்தன்று பக்தர்கள் குளம் முழுவதும் விளக்கிட்டுப் பெருமாளை வழிபடுவர். பெருமாளுக்கு செய்யும் சத்யநாராயண பூஜையை இந்த மாசிமகத்தில் செய்தால் அதிவிசேஷம்.
சகலதெய்வங்களுக்கும் சிறப்புப் பெற்ற நாள் தான் இது. 24.02.2024ல் இந்த அதிஅற்புதமான மாசிமகம் வருகிறது. இந்த மகம் நட்சத்திரம் 23ம் தேதி இரவு 8.40 மணிக்குத் துவங்கி 24ம் தேதி இரவு 11.05 மணிக்கு முடிகிறது.