பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கி மோட்சம் தரும் ஜெயா ஏகாதசி…! விரதம் இருப்பது இப்படித்தான்…

By Sankar Velu

Published:

இன்று (19.2.2024) ஜெயா ஏகாதசி. அப்படின்னா என்னன்னு கேட்பீர்கள். ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு தனிப்பட்ட பலனும் உண்டு. மாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஜெயா ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள் மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள். இந்த ஏகாதசி 19ம் தேதி காலை 8.49 அன்று தொடங்கி மறுநாள் (20.2.2024) காலை 9.55 வரை முடிகிறது.

ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விசேஷம். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் புதன் கிரக தோஷங்களும், சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.

ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு நீடித்த புகழ், பிரம்மஹஸ்தி தோஷம், நோயற்ற வாழ்வு, நல்ல மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிக்கிறார். அது மட்டுமல்லாமல் மறுமையில் வைகுண்டவாசம் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஏகாதசி விரதமும் பொதுவான பலன்களை அளித்தாலும் தனிப்பட்ட பலன்களையும் சேர்த்தும் வழங்குகிறது. அந்த வகையில், மாசி மாத வளர்பிறையில் இன்று வரும் ஏகாதசி வழிபாடு முன்னோர்களின் முக்திக்கு வழிவகுக்கிறது.

Jaya Ekathasi
Jaya Ekathasi

பிரம்மஹத்தி தோஷம் தாக்கியிருந்தால் அது நீங்கும். வாழ்வில் விரக்தி நிலையை நீக்கும். அகால மரணமடைந்தவர்கள் மோட்சம் பெற மாசி மாத ஏகாதசி வழிபாடு உதவும். ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, அனைவரும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம்.

 

சனிப்பிரதோஷம் போல பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்கள் அன்று வரும் ஏகாதசியும் முக்கியத்துவம் பெற்றது. தினமும் கடவுளை வழிபட்டு பூஜைகளை மேற்கொள்வது நல்லது. ஆனாலும் இயலாதவர்கள் ஏகாதசி அன்று உண்ணாமல் விரதம் இருப்பதால் உடல் சோர்வை அதிகரித்துக் கொள்ளாமல் வீட்டிலேயே இறைவனை தியானித்து விஷ்ணு புராணம், பாகவதம் போன்றவற்றை படிக்கலாம்.

உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக கொண்டு பகவானை மனதில் உருவேற்றிக் கொண்டே இருந்தால் விஷ்ணுவின் அருளைப் பெறலாம்.

ஜெயா ஏகாதசியில் தானமளிப்பது, யாகம் செய்வது மற்றும் புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்றவற்றால் அடையும் புண்ணிய பலனை இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதன் மூலம் கூடுதல் பலனாக அடைவார்கள்.

இந்த ஏகாதசியை நம்பிக்கையுடனும், பக்தியுடனும் அனுஷ்டிப்பவர் என்றென்றும் வைகுண்டத்தில் வாழ்வார். இந்த ஏகாதசியின் பெருமைகளைப் படிப்பதாலும், கேட்பதாலும் ஒருவர் அஸ்வமேத யாகத்தின் பலனை அடைவார்.