தமிழ் திரை உலகில் பல வில்லன் நடிகர்கள் வந்தாலும் ஒரு சில நடிகர்கள் தங்களது வித்தியாசமான நடிப்பினால் தனித்தன்மையுடன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவார்கள். அந்த வகையில் ’காதல்’ திரைப்படத்தில் அறிமுகமான தண்டபாணியும் தமிழ் திரை உலகின் ஒரு வித்தியாசமான வில்லன் தான்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் சந்தியா நடித்த ’காதல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு வில்லன் தண்டபாணி ஒரு முக்கிய காரணம். இந்த படத்தில் பரத் மற்றும் சந்தியாவின் காதலை பிரிக்கும் ஒரு வில்லன் கேரக்டரில் நாயகியின் அப்பாவாக அவர் நடித்திருப்பார். அவரது நடிப்பு வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அது மட்டுமில்லாமல், நிஜ வாழ்க்கையில் ஒருவர் காதலிக்கும் பெண்ணிற்கு இப்படி ஒரு தந்தை இருந்தால் கதி என்ன ஆகும் என பயம் வரும் அளவுக்கான நடிப்பையும் அவர் வெளிப்படுத்தி இருப்பார்.
அறிமுக படம் ’காதல்’ மிகபெரிய வெற்றி பெற்றதையடுத்து தண்டபாணிக்கு இங்கிலீஷ்காரன், சண்டக்கோழி, சித்திரம் பேசுதடி, உனக்கும் எனக்கும், வட்டாரம், உள்பட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில் தான் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய முனி என்ற திரைப்படத்தில் தண்டபாணி என்ற பெயரிலேயே ஒரு கேரக்டரில் நடித்தார். இதன் மூலம், அவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனை காதல் படத்திற்கு பின்னர் கிடைத்திருந்தது.
தமிழில் சூப்பர் ஹிட்டான ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் தண்டபாணி தமிழில் நடித்த அதே கேரக்டரில் நடித்தார். அர்ஜுன் நடித்த மருதமலை, விஷால் நடித்த மலைக்கோட்டை, சிம்பு நடித்த காளை, சுந்தர் சி நடித்த வம்புச்சண்ட உள்பட பல படங்களில் அவர் வில்லன் கேரக்டர்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்த தண்டபாணி, கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரை ரிலீசான படங்களில் பெரும்பாலும் இவர் இருந்தார். அதன் பிறகும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தது.
இந்த நிலையில் தான் காதல் தண்டபாணியின் மனைவி அருணா 2011 ஆம் ஆண்டு காலமானதையடுத்து நடிப்பு தொழிலுக்கு கிட்டத்தட்ட முழுக்கு போட்டுவிட்டார் என்று சொல்லலாம். 2014 ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். காதல் தண்டபாணி மறைந்தாலும் அவரது வில்லத்தனமான நடிப்பு இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் என்பது தான் உண்மை.
தமிழ் சினிமாவில் ஊர் பெரிய மனிதர், பிராந்தி கடை ஓனர், ஜாதி பற்று கொண்டவர், மகள் மீது உயிரே வைத்திருக்கும் அப்பா போன்ற கேரக்டர் என்றால் உடனே காதல் தண்டபாணியை கூப்பிடுங்கள் என்று தான் இயக்குனர்கள் கூறுவார்கள். ஒரு கேரக்டரை ஒப்புக்கொள்ளும் போது காதல் தண்டபாணி அதேபோன்ற கேரக்டர் உள்ள மனிதர்களை சந்தித்து அவர்களிடம் இருந்து ஒரு சில விஷயங்களை கற்றுக்கொண்டு அதை தனது மனதில் ஏற்றுக்கொண்டு நடிப்பை வெளிப்படுத்துவார் என்றும் கூறப்படுவதுண்டு.
குறிப்பாக காதல் படத்தில் சந்தியாவின் அப்பா கேரக்டர் கிடைத்த உடனே ஒரு ஜாதி வெறி பிடித்த அப்பா எப்படி இருப்பார் என்று பல ஹோம் வொர்க்குகளை அவர் படித்து அதன்பின் 100% தனது நடிப்பை வெளிப்படுத்தினார். அதேபோல் முதல் படத்தில் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை மற்றும் ஒரு பெண்ணுக்கு தந்தை என்ற கேரக்டரில் வந்ததால் அவருக்கு கிட்டத்தட்ட பல படங்களில் அதே மாதிரியான கேரக்டர்களுக்கே பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வில்லன் கதாபாத்திரங்களில் அதிகம் கலக்கியுள்ள தண்டபாணி, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் கூட நடித்து அசத்தி உள்ளார்.