உலக நாயகன் கமல்ஹாசன் எப்படி களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று இந்திய சினிமா உலகையே ஆண்டு கொண்டிருக்கிறாரோ அதேபோல் அவருடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தெலுங்கு மட்டுமல்லாமல் பான் இந்தியா திரையுலகையே கலக்கிக் கொண்டிருக்கிறார் அல்லு அர்ஜுன்.
பழம்பெரும் தெலுங்கு சினிமாவின் ஜாம்வான் இயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கத்தில் கமல்-ராதிகா நடிப்பில் கடந்த 1985-ல் வெளிவந்த படம்தான் சிப்பிக்குள் முத்து. கமல்-ராதிகாவின் அற்புதமான நடிப்பில் பார்ப்பவர் கண்களைக் குளமாக்கி மனதைக் கரைக்கும் மிக எமோஷனல் படமாக வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் கமலுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பின்னனி குரல் கொடுத்திருப்பார்.
இளையராஜாவின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் கல்நெஞ்சையும் கரைய வைத்தது என்றே சொல்லலாம். இவ்வாறு பல வகைகளிலும் சிறப்புப் பெற்ற சிப்பிக்குள் முத்து திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் படத்தின் ஆரம்பக் காட்சியில் கமலின் பேரனாக நடித்திருப்பார். 1983-ல் பிறந்த அல்லு அர்ஜூன் தன்னுடைய இரண்டு வயதிலேயே நடிப்புத்துறைக்கு வந்து விட்டார் என்பது பலரும் அறியாத தகவல்.
அன்றைய காலகட்டத்தில் அந்த குழந்தை நட்சத்திரம் இன்று சிறந்த நடிகர்களில் ஒருவராக வருவார் என்று பலரும் கணித்திருந்தார்கள். தெலுங்கு சினிமாவில் தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக அல்லு அர்ஜுன் தற்போது விளங்குகிறார். புஷ்பா படத்தின் மூலம் இந்திய சினிமாவையே கவனிக்க வைத்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதினையும் பெற்று உலக நாயகனின் மாணவன் என்பதை நிரூபித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
1985-ல் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி நடித்த விதேஜா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று இந்தியாவின் ஸ்டைலிஷ் ஸ்டாராகத் திகழ்கிறார் அல்லு அர்ஜுன். தற்போது புஷ்பா பாகம் ஒன்றில் இந்திய சினிமாவையை மிரட்டிய அல்லுகாரு புஷ்பா இரண்டாம் பாகத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.
தெலுங்கில் இவர் நடித்த ஆர்யா, ஆர்யா-2 போன்ற படங்களின் வெற்றியால் அப்போதிருந்த முன்னனி ஹீரோக்களே வாயடைத்துப் போயினர். தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்று தெலுங்கின் நம்பர்.1 நாயகனாகத் திகழ்கிறார் அல்லு அர்ஜூன்.