கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிய மூச்சு.. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உயிர் போகும் தருவாயில் உடனிருந்தவர் இவரா..!

தனது அபாரமான நடிப்பாற்றல் மூலம் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இரசிகர்களைக் கொண்டு இன்றும் மக்கள் மனதில் வாழ்கின்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, பிரான்ஸ் அரசின் செவாலியே விருது, உள்ளிட்ட உச்ச விருதுகளை தன் திறமையால் அலங்கரித்தவர்.

அவரின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது தெரியுமா? உடனிருந்தவர் யார் தெரியுமா? பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணுதான் சிவாஜி கணேசன் உயிர் பிரிகையில் அவருடன் இறுதியாக இருந்தவர். அந்த தருணங்களை அவரே உணர்ச்சிகராமாக இவ்வாறு விளக்குகிறார். “ ‘மன்னவரு சின்னவரு’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதுதான், அவருக்கு சளித்தொந்தரவு இருந்தது எனக்குத் தெரியும். தினமும் ‘ஆக்சிஜன் டபிளேசர்’ மூலம் தொண்டை சளியை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

“எனக்காக இப்படி கஷ்டப்படுகிறீர்களே?” என்று கேட்டபோது, “யார் யாருக்கோ பண்றேன். என்னை நேசிக்கிற உனக்காக இந்த சின்ன கஷ்டத்தைத் தாங்கமாட்டேனா புலி” என்று திருப்பிக் கேட்டார். இப்படித்தான் ஒருநாள் நான் காரில் நந்தனம் தேவர் சிலை அருகில் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது சிவாஜி சாரின் உதவியாளரும் டிரைவருமான முருகன், “சிவாஜி சார் உங்களை சந்திக்க விரும்புகிறார். உடனடியாக போனில் தொடர்பு கொண்டு பேசுங்கள்” என்றார். உடனடியாக நான் போனில் சிவாஜி சாரை தொடர்பு கொண்டேன். என் குரலைக் கேட்டவர், “புலி, எங்கிருக்கே?” என்று கேட்டார். “நந்தனம் பக்கம் காரில் வந்து கொண்டிருக்கிறேன்” என்றேன்.

“நேரா இங்கே வர்றே! என் கூட சாப்பிடறே! எவ்வளவு நேரத்தில் வருவே?” என்று கேட்டார். “5 நிமிஷத்தில் வந்துடறேன்” என்றேன். இதைத் தொடர்ந்து என் கார் நேராக போக் ரோட்டில் உள்ள சிவாஜி சார் வீட்டுக்கு போனது. நான் போகும்போது சிவாஜி டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருந்தார். அவருடன் சிங்கப்பூர் டி.டி. துரை என்பவரும் இருந்தார்.

கர்நாடக இசையில் ஆரம்பிக்கும் பாடலில் திடீரென புகுந்து கலக்கிய கிராமிய இசை.. அதான் ராஜாவின் ராஜாங்கம்..

மூவருமாய் மதிய உணவருந்துகிறோம். சாப்பிட்டு முடித்ததும் டி.டி.துரை கிளம்புகிறார். அவர் போனதும் அதுவரை இயல்பாய் காணப்பட்ட சிவாஜி சாரின் முகத்தில் திடீரென உற்சாகம் தொலைந்து போனது. அப்போது அவரது மகள் வயிற்றுப் பேத்தியின் கணவர் (சுதாகரன்) ஜெயிலில் இருந்தார். அதுபற்றி பேசிய சிவாஜி சார், “புலி! இந்த சூழல்ல என்னை கடவுள் ஏன்தான் இன்னும் வெச்சிருக்கார்ன்னே தோணுது.

அண்ணன் எம்.ஜி.ஆர். கொடுத்து வெச்சவரு. நல்ல பேரு, புகழ் செல்வாக்கோட போய் சேர்ந்தாரு. நான்தான் அந்த பஸ்ஸை ’மிஸ்’ பண்ணிட்டேன்” என்றார். சொல்லும் போதே குரலில் அத்தனை விரக்தி. நான் அவரை என்வரையில் சமாதானப்படுத்தினேன். “உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லவிதமாக நடக்கும் சார்” என்று சொன்னேன்.

“என்னமோ புலி! இதையெல்லாம் உங்கிட்ட சொல்லணும்னு தோணிச்சு. ஏதோ கடவுள் கண்ணைத் தொறந்தா சரி” என்றவர், “நான் வரட்டுமா?” என்று ஓய்வெடுக்க மாடிக்கு புறப்பட்டார். இது நடந்து 15 நாள் கழித்து எனக்கு டைமண்ட் பாபுவிடம் இருந்து போன்.

“சிவாஜி சார் சீரியசான நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்” என்று கூறியவர், என்னை வந்து பார்த்துவிட்டுப் போகும்படியும் சொன்னார். அதிர்ந்து போன நான், அப்போதே காரில் அப்பல்லோ பறந்தேன்.

வயிற்றுப் பிழைப்புக்காக மேஜிக் ஷோ நடத்தியவர் இந்திய திரைப்படத்துறையின் தந்தை ஆன வரலாறு – தாதா சாகேப் பால்கே!

அப்போது ராம்குமார் என்னிடம் உடைந்த குரலில் “அப்பாவின் இறுதி மூச்சு அடங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம்தான் இருப்பார்” என்று சொல்ல, நான் மனம் கேட்காமல் பதற்றமாய் சிவாஜி சார் இருந்த ‘ஐசியு’வுக்குள் போக ராம்குமாரை அழைக்கிறேன்.

“எனக்கு சக்தி இல்லை சார்!” என்று அவர் கூற, பிடிவாதமாக அழைத்துக் கொண்டு போகிறேன். தனது ஒப்பற்ற நடிப்பால் சரித்திரம் படைத்தவர். உலகமே திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் கலைச் சக்கரவர்த்தியின் இறுதி மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருப்பதை பார்க்கிறேன்.

தன் தந்தையின் அந்த கடைசிக் கட்டத்தை காண மனம் தாங்காததால், அழுதுகொண்டே ராம்குமார் அறையில் இருந்து வெளியேறினார். நான் மட்டும் நிற்கிறேன். சில நொடிகளில் நடிப்பின் இமயத்தின் இறுதிமூச்சு, கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி முடிகிறது. இதைப் பார்த்த ஒரே துர்பாக்யசாலி நான்தான். துயரம் நெஞ்சையடைக்க, கண்கள் ஆறாகப் பொங்க அவர் பாதம் தொட்டு வணங்கி அறையை விட்டு வெளியே வந்தேன்.

ஒரு சகாப்தம் அமரத்துவம் ஆனதை பார்க்க நேர்ந்த அந்த சோகத்திலும், சிவாஜி சார் என் மீது வைத்திருந்த அன்புதான் இந்த நேரத்தில் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதையும் எனக்குள்ளாக உணர்ந்தேன். சிவாஜி சார் காலமாகி 41-வது நாளில் அவருக்கு மத்திய அரசு சிறப்புத் தபால் தலை வெளியிட்டது.“

இவ்வாறு நடிகர் திலகத்தின் கடைசி நிமிடங்களை கண்முன் நிழலாடுவது போன்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...