புதிய பறவை படத்தின் வெற்றிக்குப் பின்னால் இப்படி ஒரு சீக்ரெட்டா? உச்சி நுகர்ந்து பாராட்டிய எம்.ஜி.ஆர்!

By John A

Published:

சிவாஜி நடித்த வித்யாசமான படங்களில் புதிய பறவையும் ஒன்று. கோபால்.. கோபால் என இன்றும் ஒரு பெயரை  அழைப்பதிலிருந்தே இப்படத்தின் வெற்றியை நாம் புரிந்து கொள்ளலாம். பாடல்கள் மற்றும் வித்யாசமான திரைக்கதையும் சிவாஜி, சரோஜாதேவி, சௌகார்ஜானகியின் அற்புதமான நடிப்பு என படம் அனைவரையும் கவரும் விதமாக அமைந்தது.

சேஷ் ஆன்கே என்ற வங்காளப் படத்தின் உரிமையை வாங்கி தமிழிலே தயாரிக்கப்பட்ட படம்தான் ‘புதிய பறவை’. சிவாஜி பிலிம்ஸ் சார்பிலே தயாரிக்கப்பட்ட முதல் படம் அது. படத்தின் கதைப்படி அந்த நவநாகரீகப் பெண்ணின் பாத்திரத்தில் சவுகார் ஜானகியை ஏற்க முதலில் மறுத்த படத்தின் இயக்குனரான தாதா மிராசி, “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடல் படப்பிடிப்பின்போது சவுகாரின் நடிப்பைப் பார்த்துவிட்டு மிரண்டுபோனது மட்டுமின்றி படத்தின் பிற்பகுதியில் அவரது பாத்திரத்திற்கு அதிகமான முக்கியத்துவத்தையும் கொடுத்தார்.

கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டபோது முதல் டேக்கிலேயே சிவாஜி, சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, சவுகார் ஜானகி ஆகிய எல்லா நட்சத்திரங்களும் மிகச் சிறப்பாக நடித்துவிடவே உற்சாகத்தோடு “டேக் ஓகே,பேக் அப்” என்றார் படத்தின் இயக்குனரான தாதா மிராசி.

கிளைமாக்ஸ் காட்சி மிகச் சிறப்பாக அமைந்துவிட்ட மகிழ்ச்சியில் எல்லோரும் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியே செல்லத் தொடங்கிய நேரத்தில் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி பேசுவது போல இன்னும் ஒரு வசனத்தை சேர்த்தால் மட்டுமே அந்தக் காட்சி நிறைவு பெரும் என்று கதாசிரியர் ஆரூர்தாசுக்கு தோன்றியது. எனவே படப்பிடிப்பு தளத்தை வீட்டு வெளியே போய்க் கொண்டிருந்த சிவாஜியை அவசரம் அவசரமாக அவர் தடுத்து நிறுத்தினார்.

ஊர்ப் பாசத்தில் பாக்யராஜ் செஞ்ச தரமான வேலை.. காமெடி கிங் கவுண்டமணியை அறிமுகப்படுத்தியது இப்படித்தான்

“ஒரு போலிஸ் அதிகாரி என்பதை மறந்து அந்தப் பெண் உங்களது காலடியில் விழுந்து
கதறுகிறாள். ஆனால் நீங்கள் அதைக் கண்டு கொள்ளாமல் நடந்து சென்று விடுகிறீர்கள். நீங்கள் அப்படிப் போவது அந்தப் பெண் கதறி அழுவதையும் நடிப்பு என்று எண்ணிக் கொண்டு நீங்கள் போவது போல இருக்கிறது. அதற்குப் பதிலாக அவளை நீங்கள் ஏற்றுக்கொண்டது மாதிரி அன்போடும், அனுதாபத் தோடும் “பெண்மையே நீ வாழ்க, உள்ளமே உனக்கு என் நன்றி” என்று சொல்லி விட்டுச் சென்றால் படத்தின் கிளைமாக்ஸ் நிறைவாக இருக்கும்” என்று ஆரூர்தாஸ் சொன்னபோது,

அவர் சொன்ன திருத்தம் மிகவும் சரியானது என்பதை உணர்ந்துகொண்ட சிவாஜி,
செட்டுக்கு வெளியே நடந்து போய்க் கொண்டிருந்த இயக்குனர் தாதாமிராசி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா ஆகிய எல்லோரையும் மீண்டும் செட்டிற்கு வருமாறு அழைத்தார். அதன் பின்னர் ஆரூர்தாஸ் புதிதாக சேர்க்க விரும்பிய அந்த வசனத்தைப் பேசி சிவாஜி நடிக்க, அந்தக் காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது.

படத்தைப் பார்த்து அதன் கிளைமாக்ஸ் காட்சியை வெகுவாக பாராட்டிய எம்.ஜி.ஆர்,
“படத்தின் கிளைமாக்ஸ் இங்கிலீஷ் படம் பார்க்கிற மாதிரி ரொம்ப வித்தியாசமாக இருந்தது. கிளைமாக்சில் அந்த சஸ்பென்ஸ் உடைகின்ற காட்சியில் உங்களது வசனம் ரொம்பவும் பிரமாதமாக இருந்தது“ என்று எம்.ஜி.ஆர் சொன்னவுடன், அவரது காலில் விழுந்து வணங்கிய ஆரூர்தாஸ் அப்போது மானசீகமாக சிவாஜிக்கு தன்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்.