சரவெடியா.. ஊசி பட்டாசா.. சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி எப்படி இருக்கு?.. விமர்சனம் இதோ!

By Sarath

Published:

சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்எஸ் பாஸ்கர், ரவி மரியா, லொள்ளு சபா மாறன், சேஷு, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கியுள்ளார்.

சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான சந்தானம் ஹீரோவான பின்னரும் வடிவேலு, சூரி மற்றும் யோகி பாபு போல சீரியஸான படங்களை இதுவரை செய்யாமல் தொடர்ந்து ரசிகர்களை எப்படியாவது சிரிக்க வைக்கக்கூடிய படங்களை எடுத்து வருகிறார்.

வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்:

அதில் பல படங்கள் அவர் நினைத்தது போல காமெடி படமாக வெளியாகாமல் கடுப்பைக் கிளப்பினாலும் தொடர்ந்து தனது நடிப்பை ரசிகர்கள் சிரிக்கும்படி கொடுத்து வரும் சந்தானம் இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு நல்ல தரமான காமெடி படத்தை கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

1974-ஆம் ஆண்டு ஒரு கிராமத்தில் மூடநம்பிக்கையால் மக்கள் கடவுள் பக்தியை கண்டமேனிக்கு பெருக்கி வரும் நிலையில், அதைப் பயன்படுத்தி காசு சம்பாதிக்கலாம் என நினைக்கும் சந்தானம் அதற்காக என்னவெல்லாம் கோல்மால் செய்கிறார். அவருக்கு செக் வைக்க ஊருக்கு புதிதாக வரும் தாசில்தார் அவரை விட மோசமான திருடனாக இருந்தால் எப்படி இருக்கும் அதிலிருந்து படம் எங்கே சென்று எப்படி முடிகிறது என்கிற கதையை கார்த்திக் யோகி சிறப்பாக எழுதி சந்தானம் மற்றும் அவரது நகைச்சுவை டீமை வைத்து பக்கவாக இயக்கியுள்ள படம்தான் வடக்குப்பட்டி ராமசாமி.

சரவெடி காமெடி:

ஆரம்பித்ததில் இருந்து அந்த கதைக்குள் நம்மை கொண்டு செல்லும் வரை என்னடா சொல்ல வராங்க என்பது போலத்தான் துவங்குகிறது. ஆனால் இரண்டாம் பாதிக்கு மேல், நிழல்கள் ரவியின் கதாபாத்திரம் மூலமாக இயக்குனர் எதிர்பாராத சிரிப்பலையை தியேட்டர்களில் உருவாக்கி விட்டார் என்றே சொல்ல வேண்டும். கண்டிப்பாக சந்தானத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் அதிக வசூல் ஈட்டக் கூடிய படமாகவும் மாறும் என்றே தெரிகிறது.

தேவையில்லாமல் நிறைய பாடல்களை வைத்து ரசிகர்களை நோகடிக்காமல் ஷான் ரோல்டன் இசையில் ஒரு சில பாடல்கள் மட்டுமே இடம் பெறுவதும் கதைக்கும் காமெடிக்கும் அதிக முக்கியத்துவத்தை கொடுத்து கடைசி அரைமணி நேரம் இடைவிடாமல் ரசிகர்களை சிரிக்க வைத்து தியேட்டரில் இருந்து வெளியே அனுப்புவது படத்தை வெற்றி படமாக்கும் யுக்தி என்றே சொல்லலாம்.

ஹீரோயினாக நடித்துள்ள மேகா ஆகாஷ் இந்தப் படத்தில் தேவையில்லாத ஹீரோயினாக வராமல் கதைக்கு தேவையான கதாபாத்திரமாக பீரியட் லுக்கில் அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து செல்கிறார்.