தனது முதல் படத்திலேயே மனிதர்களின் ஒட்டுமொத்த டென்ஷனையும் தூக்கி எறிந்து தியேட்டரில் இரண்டரை மணி நேரம் வாய்விட்டுச் சிரிக்க வைத்தவர் இயக்குநர் சுந்தர் சி. தனது சினிமா குருவான மணிவண்ணனிடம் இருந்து தனியே வந்து தனது முதல்படத்தை எடுக்கத் தயாரானார் சுந்தர் சி. அருண் விஜய்யை வைத்து முறை மாப்பிள்ளை படத்தை பாதி இயக்கிய நிலையில் தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாடால் வெளியேறி பின் உள்ளத்தை அள்ளித்தா என்ற சென்ற நூற்றாண்டின் சிறந்த காமெடிப் படத்தைக் கொடுத்து வெற்றி கண்டார்.
பின் இந்தக் கூட்டணி மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக, கண்ணன்வருவான், அழகான நாட்கள் என கவுண்டமணி-கார்த்திக்-சுந்தர் காம்போ காமெடியை அள்ளி அள்ளிக் கொடுத்தனர். கமலோடு ‘அன்பே சிவம்’ படத்தில் இணைந்தது சுந்தர்.சிக்கு ஒரு புதிய அனுபவம். அன்பே சிவம் ஒரு டிராவலிங் படம். சுந்தர்.சி கமலோடு செய்த டிராவல் நிறைய அனுபவங்களை அவருக்கு தந்திருக்கும். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் கமலுக்கு அன்பே சிவம் கை கொடுத்ததைப் போல சுந்தர்.சி-க்கு கை கொடுக்கவில்லை.
நடிச்சா ஹீரோயின்தான்.. அடம்பிடித்த ஆச்சி மனோரமா.. சமாதானம் செய்து காமெடியில் இறக்கிய கண்ணதாசன்
இதுபற்றி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த சுந்தர் சி..“அன்பே சிவம் படத்தை இப்போது எல்லோரும் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இப்போது அந்தப் படத்தைப் பார்த்து ஆஹா ஓஹோ என்று வாயாரப் புகழ்கிறார்கள்.
அவர்களைப் பார்த்தால் கோபம் தான் வருகிறது. உண்மையைச் சொல்லப் போனால் மிகவும் ஆசைப்பட்டு, ரசித்து, சந்தோஷமாக எடுத்த படத்தால் அடுத்த ஒரு வருடம் நான் சும்மாதான் இருந்தேன். இந்தப் படத்தால் ஆதாயத்தைக் காட்டிலும் இழப்புகளே அதிகம் இருந்தது. அதிகமாக காயமும் பட்டேன். இருந்தாலும் நல்ல கருத்துக்களுக்கு என்றுமே ஆதரவு இருக்கும் என்பது போல் என் வாழ்வில் அன்பே சிவம் என்ற படத்தை இயக்கியது பெருமையாக உள்ளது” என்று கூறினார் சுந்தர்.சி.
உண்மைதான் அன்பே சிவம் படம் வந்த புதிதில் கருவும், நோக்கமும் புரியாமல் படம் சரியாக சென்றடையவில்லை. இதுபோல் பல படங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. செல்வராகவனுக்கு புதுப்பேட்டை படமும் ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்தது. ஆனால் இப்போது கொண்டாடப்படுகிறது.