நடிச்சா ஹீரோயின்தான்.. அடம்பிடித்த ஆச்சி மனோரமா.. சமாதானம் செய்து காமெடியில் இறக்கிய கண்ணதாசன்!

இந்திய சினிமா உலகில் 5 தலைமுறைக்கும் மேலாக 5 முதல்வர்களுடன், கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர்தான் மனோராமா. இந்திய சினிமாவின் ஆச்சி என்று அன்புடன் அழைக்கப்படும் மனோரமாவை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் கவிஞர் கண்ணதாசன். நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த மனோரமாவை தனது சொந்தப் படமான மாலையிட்ட மங்கையில் அறிமுகப்படுத்தினார்.

மனோரமாவின் உடன் பிறவா அண்ணனான கவிஞர் கண்ணதாசன் கம்பெனியில் புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்த வீரய்யா அவர்கள் மனோரமாவின் சினிமா வாழ்க்கையைப் பற்றிக் கூறும் போது, “1957-ம் வருஷம் திருச்சியில் மனோரமாவின் நாடகத்தில் அவருடைய நடிப்பு, வசன உச்சரிப்பை எல்லாம் பார்த்து, ‘மெட்ராஸ் வந்தா என்னைப் பாரும்மா… சினிமாவில் வாய்ப்பு தர்றேன்’ என்றார் கவிஞர் கண்ணதாசன். ஆனால் இடையில் மனோரமாவை நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், தன் நாடகக் கம்பெனியில் நடிப்பதற்காக சென்னை அழைத்து வர, கண்ணதாசன் தன் தயாரிப்பான ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் மனோரமாவுக்கு வாய்ப்பளித்தார்.

‘மாலையிட்ட மங்கை’ படத்தில் கதாநாயகனாக டி.ஆர்.மகாலிங்கமும், கதாநாயகிகளாக பண்டரி பாய், மைனாவதியும் நடிக்க, நகைச்சுவை வேடத்துக்கு காக்கா ராதாகிருஷ்ணனுக்கு ஜோடியாக மனோரமா. ‘எனக்கு கதாநாயகி வேஷம் தான் வேணும்’ என்று கோபித்துக் கொண்ட மனோரமாவை, ‘உனக்கு நகைச்சுவை கதாபாத்திரம் சரியாக இருக்கும்’ என்று சம்மதிக்க வைத்தார் கண்ணதாசன்.

ஒரே பாடலுக்காக மூன்று முறை சம்பளம் வாங்கிய கவிஞர்.. பக்தி மணம் கமழும் இந்தப் பாடல்தானா அது?

மனோரமாவின் முதல் ஸீனில், நடிப்பு வந்தால் வசனம் வரவில்லை, வசனம் வந்தால் நடிப்பு வரவில்லை. 10 டேக்குக்கு மேல் போனதும், டைரக்டர் ஜி.ஆர்.நாதன், `மனோரமா வேண்டாம்’ என்றார் கவிஞரிடம்! கவிஞரின் ஏற்பாட்டில், நானும் ஓர் உதவி இயக்குநரும் மனோரமா வீட்டுக்கே சென்று பயிற்சி கொடுத்தோம். மறுநாள் ஒரே டேக்கில் அசத்தி கைதட்டல் வாங்கினார் மனோரமா. இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம் இது. என்று கூறும் வீரய்யா மனோரமா தன்னிடம்,

“அண்ணே, ஒருவேளை நான் கதாநாயகியா நடிச்சிருந்தா, 10 வருஷத்துல காணாம போயிருப்பேன். நான் நடிகையானதுக்கும் நீங்கதான் காரணம், அதையும் மறக்க மாட்டேண்ணே..” என்று 1,500 படங்கள் நடித்த பின்னரும் நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பார். எனக்கே தெரியாமல் என் மனைவி பெயரில் இப்போது நாங்கள் வசிக்கும் ஃபிளாட்டை வாங்கி வைத்திருந்து, எங்களுக்கு வீடு தேவைப்பட்ட நேரத்தில் கொடுத்து உதவினார். என்று வீரய்யா அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews