தளபதி விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகரின் திருமணத்தை நடத்தி வைத்த நடிகர் திலகம்!

By Velmurugan

Published:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சில படங்களுக்கு உதவி டைரக்டராக வேலை செய்து கொண்டிருந்தவர் தான் எஸ்.ஏ சந்திரசேகர். அப்படி உதவி இயக்குனராக வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் தான் சந்திரசேகர் சோபா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் எஸ் ஏ சந்திரசேகர் ஒரு கிறிஸ்தவர்,சோபா ஒரு இந்து மதத்தைச் சார்ந்த பெண். இருப்பினும் சந்திரசேகர் சோபாவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டார். இது ஒரு காதல் கலப்பு திருமணம் என்பதால் சுற்றியுள்ளவர்கள் திருமணத்திற்கு பல ஆலோசனைகள் அடுத்தடுத்து கூறி வந்தனர். ஆனால் எஸ் ஏ சந்திரசேகர் தன் திருமணம் நடிகர் திலகம் சிவாஜியின் தலைமையில் தான் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

இதற்கு இன்னொரு காரணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.எஸ் ஏ சந்திரசேகர் வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதாலும் திரைப்படத்துறையில் பணியாற்றி வருவதால் சோபா குடும்பத்தினர் தரப்பில் இருந்து ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படலாம் என்ற காரணத்தை மையமாக வைத்தும் சிவாஜி தலைமையில் இந்த திருமணம் நடக்க வேண்டும் என விரும்பினார். மேலும் சிவாஜி மேல் இருந்த மிகப்பெரிய மரியாதையும் நம்பிக்கையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. எஸ் ஏ சந்திரசேகர் நடிகர் சிவாஜி கணேசனை நேரில் பார்த்து என்னுடைய திருமணம் உங்கள் தலைமையில் தான் நடக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை முறையாக கூறினார். இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொள்வதை நன்றாக புரிந்து கொண்ட நடிகர் சிவாஜி சந்திரசேகரின் திருமணத்தை நடத்தி தருவதாக வாக்குறுதியும் கொடுத்தார்.

1973 ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி சோபா, சந்திரசேகர் திருமணத்தை சிவாஜி கணேசன் நடத்தி வைத்தார். எல்லா விஷயங்களுக்கும் மனைவியை அழைத்துவரும் சிவாஜி இந்த திருமணத்திற்கும் மனைவியை அழைத்து வந்தார். கமலாம்பாள் தாலி எடுத்துக் கொடுக்க இந்த திருமணமும் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணம் நடந்த நேரத்தில் சந்திரசேகர் எங்கள் தங்க ராஜா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அப்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
திருமணம் முடிந்த நான்காவது நாளே படப்பிடிப்பிற்கு எஸ்ஏ சந்திரசேகர் கலந்து கொண்டுள்ளார். இதை கவனித்த சிவாஜி உடனே சந்திரசேகரை அழைத்து திருமணம் முடிந்த மூன்று நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் ஏன் படப்பிடிப்பு தளத்திற்கு வேலைக்கு வந்தாய் என கேட்டுள்ளார். மனைவியை மெட்ராஸில் விட்டு விட்டு நீ எதற்காக இங்கு வந்த, நீயும் மெட்ராசுக்கு திரும்பி சென்று மனைவியுடன் இருக்குமாறு கூறினார்.

ஆனால் சந்திரசேகர் மெட்ராஸ் செல்ல மறுத்துவிட்டார், ஷூட்டிங்கில் வேலை செய்வதுதான் மனதிற்கு திருப்தியாக இருக்கிறது என கூறினார். சந்திரசேகருக்கு சென்னையில் மனைவியுடன் இருப்பது விருப்பமில்லை என்பதை புரிந்து கொண்ட சிவாஜி உடனே சென்னையில் இருக்கும் சந்திரசேகரின் மனைவிக்கு போன் செய்து அன்று இரவே விமானத்தின் மூலம் ஷோபாவை ஊட்டிக்கு வரவழைத்தார். அதை எடுத்து சந்திரசேகருக்கும் ஷூட்டிங்கில் இருந்து விடுமுறை அளித்துவிட்டார்.

மீண்டும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் விஜய்! தளபதி 69 திரைப்படத்தின் தெறிக்கவிடும் அப்டேட்!

நடிகர் திலகம் சிவாஜியின் உதவியால் சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் தங்கள் தேனிலவை ஊட்டியில் கொண்டாடினர். இது குறித்து சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது நான் என் மனைவியுடன் தேனிலவு கொண்டாட நடிகர் திலகம் சிவாஜியின் கருணை தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். அந்த செயலை என்னால் வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் நடிகர் திலகத்தின் மனைவி கமலா அம்மா மிகவும் ராசி வாய்ந்த கைகளால் எனக்கு எடுத்துக் கொடுத்த தாலியின் அதிர்ஷ்டமே நான் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.