தந்தையின் மறைவுக்கு பின் கிடைத்த அரசியல் வாய்ப்பு.. சினிமா, அரசியல், பிசினஸ் என அனைத்திலும் சாதித்த விஜய் வசந்த்..

By Bala Siva

Published:

சினிமாவில் நடித்து அதன் மூலம் கிடைக்கும் பிரபலத்தை கொண்டு அரசியலிலும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என பலரும் துடியாய் துடிப்பார்கள். அந்த வகையில், மிகவும் இளம் வயதிலேயே அரசியல் வட்டாரத்தில் காலடி எடுத்து வைத்து இன்று எம்.பி ஆகவும் இருப்பவர் தான் நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜய் வசந்த்.

பிரபல தொழிலதிபர் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் நினைத்தால் பல திரைப்படங்களை தயாரிக்கும் அளவுக்கு அவர் செல்வந்தராக இருக்கிறார். ஆனால் அவர் சினிமாவின் மீது உள்ள ஆசை காரணமாக சின்ன சின்ன கேரக்டரில் முதலில் நடிக்க தொடங்கினார். தன்னுடைய முகம் நன்றாக மக்கள் மனதில் பதிய வேண்டும் என்றும் அதன் பிறகு சொந்த படம் எடுத்து ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது எண்ணமாக இருந்தது.

இதனால் தான் அவர் தனது நண்பரான வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’சென்னை 600028’ என்ற திரைப்படத்தில் கோபி என்ற கேரக்டரில் அறிமுகமானார். காமெடி மற்றும் கலக்கலான இந்த கேரக்டரில் அவர் நடித்த நிலையில் ’தோழா’, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’சரோஜா’, சசிகுமார் நடித்த ’நாடோடிகள்’ ’கனிமொழி’ போன்ற படங்களில் நடித்த நிலையில், அஜித் நடித்த ’மங்காத்தா’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

அதேபோல் விஜய் நடித்த ’நண்பன்’ திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அதன் மூலம் படத்தில் தாக்கமும் அதிகமாக இருந்தது. மேலும் மதில் மேல் கோழி, பிரியாணி, என்னமோ நடக்குது, தெரியாம உன்ன காதலிச்சிட்டேன் போன்ற படங்களில் நடித்த அவர் சூர்யாவின் ’மாஸ்’ படத்தில் நடித்தார்.

vijay vasanth2

அதேபோல் வெற்றிவேல் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்த விஜய் வசந்த், ’சென்னை 600028’ படத்தின் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த கோபி கேரக்டரில் மீண்டும் நடித்திருந்தார். முதல் பாகம் போல, இதிலும் விஜய் வசந்தின் காமெடி பெரிய அளவில் வொர்க் அவுட்டாகி இருந்தது. அது மட்டுமில்லாமல், அவரது சில மீம் டெம்ப்ளேட்களும் இந்த நாள் வரையில் மக்கள் மத்தியில் வைரலாகவும் இருந்து வருகிறது.

2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவர் திரை உலகில் பெரிய அளவில் நடிக்கவில்லை. குறிப்பாக அவரது தந்தை 2020 ஆம் ஆண்டு காலமான பின்னர் அவர் கிட்டத்தட்ட திரை உலகை மறந்து விட்டார் என்று கூறலாம். இந்த நிலையில் தான் தந்தையின் மறைவுக்கு பின்னர் அவர் முழுநேர அரசியல்வாதியாக இருக்க முடிவு செய்தார். அவருக்கு  தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய பதவி ஒன்று அளிக்கப்பட்டது.

அடுத்து  2021ஆம்  ஆண்டு தனது தந்தை இறந்ததால் நடைபெற்ற இடைத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை தோற்கடித்தார். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவர் அதே தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

 

vijay vasanth1

இதனை அடுத்து தந்தையின் மறைவுக்கு பின்னர் தந்தை ஆலமரம் போல் வளர்த்து வைத்திருந்த வசந்த் அண்ட் கோ நிறுவனத்தை அவர் தொடர்ந்து நடத்தினார். கிட்டத்தட்ட 4000 கோடி வியாபாரம் நடக்கும் இந்த நிறுவனம் தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. தந்தையை போல பிசினஸிலும் சாதித்து வரும் விஜய் வசந்த், தேர்தலில் இந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தால் அதிலும் சாதிப்பார் என்றும் தெரிகிறது.