பல்வேறு சர்ச்சைகள், வழக்குகளுக்குப் பின் வெற்றிகரமாக கோவிலாக உருவெடுத்துள்ளது அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமி. இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று அயோத்தியை நோக்கியே உள்ளது. தசரத மன்னனின் வாரிசான ஸ்ரீராமர் மஹாவிஷ்ணுவின் 7-வது அவதாரமாக விளங்குகிறார்.
இவர் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமஜென்ம பூமி பகுதியானது தற்போது பிரம்மாண்ட கோவிலாக உருவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட திருப்பதி ஏழுமலையானுக்கே சவால் விடும் கோவிலாக அயோத்தி ஸ்ரீராமர் கோவில் உருவெடுத்துள்ளது.
அஹமதாபாத்தின் சோம்புரா குடும்பம் கோவிலின் ஆரம்ப வடிவமைப்பை உருவாக்கியது. சந்திரகாந்த் சோம்புரா என்பவர் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோவிலின் முதன்மை கட்டிடக் கலைஞர் ஆவார். சோம்புராக்கள் கடந்த 15 தலைமுறைகளாக உலகளவில் 100க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களுக்கான வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர் . சோம்புராக்கள் 2020 இல் அயோத்தியில் ராமர் கோவிலின் புதிய வடிவமைப்பை உருவாக்கினர். கோவிலின் புதிய வடிவமைப்பு ஷில்ப சாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி உள்ளது.
அயோத்தியில் இன்று ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம்… நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
கோவிலின் புதிய வடிவமைப்பு அசல் வடிவமைப்பிலிருந்து சற்று வித்தியாசமானது. அயோத்தியில் ராமர் கோயில் 161 அடி உயரமும் , 235 அடி அகலமும் , 360 அடி நீளமும் கொண்டதாக உள்ளது.
கிட்டதட்ட ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் மொத்தம் 2.7 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும். இதில் 57,400 சதுரஅடியில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளது. இந்த கோவிலுக்கு மொத்தம் 12 நுழைவு வாயில்கள் உள்ளன.
இக்கோவிலின் சுவர்களில் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கருவறை எண்கோண வடிவம் கொண்டதாகும். இக்கோவிலின் கர்ப்ப கிரகத்தில் நிறுவனப்பட உள்ள ராம் லல்லாவின் சிலையின் மீது சூர்ய கதிர்கள் படும் வகையில் கட்டப்பட்டுள்ளன.
மூலவர் ராமர் சிலை 5 அடி உயரத்தில் அமைக்கப்படட்டுள்ளது. இந்த கோவிலுக்காக 2100 கிலோ எடையுள்ள மணி, எட்டாவிலிருந்து பிரத்யேகமாக செய்து கொண்டு வரப்பட்டுள்ளது. 6 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட இந்த மணியின் விலை 21 லட்சம் ரூபாயாகும்.
1000 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலம் கொண்டதாக இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. எல் அண்ட் டி நிறுவனம் ராமர் கோவிலை கட்டி வருகிறது. பல கட்ட சோதனைகள் நடத்தி, ஸ்திரதன்மை ஆராயப்பட்டு ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் ஒவ்வொரு தளத்திலும் பிரார்த்தனை மண்டபமும், கீர்த்தனை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் முன்புறம் மிக பிரம்மாண்டமாக அனுமன் சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
அதோடு மிக முக்கியமாக ராம் ஜென்ம பூமியையும், அயோத்தியில் உள்ள மிக முக்கியமான மற்றும் பழமையான ஹனுமன் கோவிலையும் இணைக்கும் சாலை விரிவாக்கப் பணிகளும் நடந்து வருகின்றன. ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஹனுமனையும் தரிசிக்க செல்ல வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராம் ஜெயண்ட பூமி பாத் 30 மீட்டர் அகலமும், பக்தி பாத் 14 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.
ஸ்ரீ ராமர் பிறந்த இடம் தீர்த்த பகுதிக்குள் பல மத மற்றும் பிற முக்கிய வசதிகள் இருக்கும். சொற்பொழிவு கூடம், பிரார்த்தனை கூடம், கல்வி நிறுவனம், அருங்காட்சியகம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் வசதி போன்ற வசதிகளும் இக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ளன.