அயோத்தியில் இன்று ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம்… நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

அயோத்தியில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோவில் தற்போது உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேகமும் வந்து விட்டது. உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ராமர் கோவிலைப் பார்க்க பெரும் ஆவலுடன் வந்து கொண்டு இருக்கின்றனர். கோவில் முழுக்க கலைநயமிக்க சிற்ப வேலைப்பாடுகள் ஆயிரக்கணக்கான சிற்ப வல்லுநர்களைக் கொண்டு நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளன.

Sriramar
Sriramar

அது மட்டுமல்லாமல் பசுமைக்குக் கொஞ்சம் கூட பங்கம் விளைவிக்காத வகையில் கட்டடம் முழுக்க சிறு இரும்பு ஆணி கூட பயன்படுத்தாமல் மர சிற்பங்களைக் கொண்டே வடிவமைக்கப் பட்டுள்ளது இந்த ஆலயத்தின் மற்றும் ஒரு தனிச்சிறப்பாகும். இன்று மதியம் 12.20 மணிக்கு ராமர் கோவிலில் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் உலகம் முழுவதும் உள்ள 7000க்கும் அதிகமான முக்கிய பிரமுகஸ்தர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்கு விஐபிகள் தவிர வேறு யாரும் அனுமதி கிடையாது என்பதால் மற்றவர்கள் ராமபிரானை எப்படி வழிபட வேண்டும் என்று பார்ப்போமா…

அயோத்தி ராமர் கோவிலில் இன்று (22.1.2024) மகாகும்பாபிஷேகம் என்று அழைக்கப்படும் பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது. ராமருக்கு என்று தனியாக ஆலயம் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம். நம் அருகில் உள்ள பெருமாள் கோவில்களில் ராமருக்கு என்று ஒரு சன்னதி இருக்கும். அங்கு போய் விளக்கு போடலாம்.

அங்கு போய் நாம் என்ன நினைத்தோமோ அதன்படி ராமரை வேண்டி வழிபடலாம். அர்ச்சனை செய்யலாம். இனிப்புகள் மற்றும் பழங்கள் வாங்கி சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணலாம். அதை அங்கு வரும் அடியார்களுக்குக் கொடுக்கலாம்.

நம்மால் முடிந்தபட்சம் கையளவு மலராவது கொண்டு போய் ராமபிரானுக்கு சமர்ப்பணம் செய்யலாம். நம்ம வீட்டில் இருந்தபடியே ராமருடைய நாமத்தைச் சொல்லலாம். ஸ்ரீராமஜெயம் சொல்வதால் பல நன்மைகள் நமக்கு உண்டாகின்றன. ராமருடைய அன்பு எப்படிப்பட்டது என்று நாம் ராமாயணத்தின் வழியாக அறிந்து கொள்ளலாம்.

குகன் வந்து வழிபட்டபோதும் அவரது அன்பை ஏற்றுக்கொண்டார். சுக்ரீவன் வந்து அவரை சரணாகதி அடைந்த போது அவனையும் ஏற்றுக்கொண்டார். விபீஷணன் வந்த போது அவருக்கும் அருள்புரிந்தார்.

சபரி மூதாட்டி குழந்தைகளுக்கு எப்படி கடித்துப் பார்த்து எச்சில் பழங்களை கொடுப்பாரோ அதே போல ராமருக்கும் கொடுத்தார். ரொம்பவும் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். கண்டிப்பாக நாமும் ஒரு நாள் அயோத்தி போய் ராமபிரானை வழிபடுவோம். ராமநாமம் ஜெபிப்பது, ராமநாமம் எழுதுவது, சுந்தரகாண்டம், ராமாயணம் படிப்பதால் உண்டாகும் சிறப்புகள் நமக்குத் தெரியும். அதனால் முழுமனதோடு ராமபிரானை நாம் வழிபட்டு அவரது அருளை பரிபூரணமாகப் பெற்று மகிழ்வோம்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews