பாட்டி ரோல் கிடைச்சாலே பின்னிடுவாங்க.. ‘சதிலீலாவதி’ அம்புஜம் மாமியை ஞாபகம் இருக்கா.. 30 ஆண்டுகள் திரையுலகில் பதித்த தடம்..

By Bala Siva

Published:

ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் நிறைய பாட்டி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் பிரபலமாக இருப்பதை பார்த்திருப்போம். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்கள் பின்னாளில் பாட்டி கதாபாத்திரங்களிலும் பின்னி எடுப்பார்கள். அந்த ககையில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவர் தான் வத்சலா ராஜகோபால்.

நடிகை வத்சலா கடந்த 1979 ஆம் ஆண்டிலிருந்து நாடகத் துறையில் நடித்து வருகிறார். 25 ஆண்டுகளில் அவர் 450-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். அதில் பல நாடகங்களில் அவர் மாமி வேடத்தில் நடித்துள்ளார். நாடகங்களை தாண்டி, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நிறைய நடித்து பிரபலமாகி உள்ளார்.

vatsala2

கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ரோஜா’ திரைப்படத்தில் தான் அவர் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னால் ’சதிலீலாவதி’ திரைப்படத்தில் அம்புஜம் மாமியாக கலக்கினார். இதனை அடுத்து ’செல்வா’, ’காலமெல்லாம் காதல் வாழ்க’ உள்பட பல படங்களில் நடித்தார். அர்ஜுன் நடித்த ’ரிதம்’ என்ற திரைப்படத்தில் அர்ஜுன் அம்மாவாக நடித்த அவர் அதன் பிறகு ’வின்னர்’ ’ஜூலி கணபதி’ ’அந்நியன்’ போன்ற படங்களில் நடித்தார். ’அந்நியன்’ திரைப்படத்தில் விக்ரமின் பாட்டியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ’மழை’ ’பட்டியல்’ ’மொழி’ ’சபரி’ ’துள்ளல்’ ’ஜெயங்கொண்டான்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். 2013 ஆம் ஆண்டு அவர் ’கல்யாண சமையல் சாதம்’ என்ற திரைப்படத்தில் நாயகி லேகா வாஷிங்டனின் பாட்டியாக நடித்திருந்தார். அதன் பிறகு அவர் திரையுலகில் நடித்ததாக தெரியவில்லை.

vatsala1

நடிகை வத்சலா ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ’காதல் பகடை’ ’சித்தி’ ’கதை நேரம்’ ’ஆனந்தம்’ ’சொர்க்கம்’ ’மை டியர் பூதம் மகள்’ ’வசந்தம்’ ’முந்தானை முடிச்சு’ ’பைரவி’ உள்பட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சலனம்’, கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ’மஞ்சள் மகிமை’ ஜெயா டிவியில் ’கிரிஜா எம்ஏ’ ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ’உரிமை’ உள்பட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

தற்போது 90 வயதாகும் வத்சலா நடிப்பதை நிறுத்திவிட்டாலும் அவரது நடிப்பில் உருவான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் இன்னும் மக்கள் மனதை விட்டு நீங்கவில்லை என்பது தான் உண்மை.