தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்து மறைந்த முரளியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. தமிழ் சினிமாவின் தடத்தை மாற்றிய பல முக்கியமான படங்களில் நடித்துள்ள முரளியின் மகன் அதர்வாவும் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இதனிடையே, முரளியின் நெருங்கிய உறவினரான டேனியல் பாலாஜியும் தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் மறைந்த நடிகர் முரளியின் உறவினர் என்பது பலரும் அறியாத உண்மை.
நடிகர் டேனியல் பாலாஜி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். சென்னை தரமணியில் உள்ள திரைப்பட கல்லூரியில் இயக்குனர் படிப்பு படித்தார். இவரது மாமாவும் நடிகர் முரளியின் அப்பாவுமான சித்தலிங்கய்யா ஒரு இயக்குனர் என்பதால் அவர் டேனியல் பாலாஜியையும் இயக்குனராக வேண்டும் என்பதற்காக சென்னை தரமணி இயக்குனர் திரைப்படக் கல்லூரியில் சேர்த்து விட்டார்.
இயக்குனர் படிப்பு முடித்தவுடன் அவரும் இயக்குனர் வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருந்தார். கமல்ஹாசனின் மருதநாயகம் படத்தில் புரொடக்சன் மேனேஜர் யூனிட்டில் இருந்த அவர், அந்த படம் கைவிடப்பட்ட பிறகு அவர் சித்தி என்ற டிவி சீரியலிலும் நடித்தார்.
இந்த சீரியலில் கிடைத்த பிரபலம் காரணமாக அவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். ஸ்ரீகாந்த் நடித்த ’ஏப்ரல் மாதத்தில்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், அதன் பிறகு தனுஷ் நடித்த காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்தார்.
இருப்பினும் டேனியல் பாலாஜிக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படங்கள் என்றால் அது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’காக்க காக்க’ மற்றும் வேட்டையாடு விளையாடு ஆகிய திரைப்படங்கள் தான். காக்க காக்க படத்தில் போலீஸ் அதிகாரியாக சூர்யாவின் நண்பர் கதாபாத்திரத்திலும், வேட்டையாடும் விளையாடு படத்தில் மிரட்டல் வில்லனாகவும் நடித்த டேனியல் பாலாஜிக்கு பின்னர் பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருந்தது.
மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்த அவர் முத்திரை, மறுமுகம், ஞானக்கிறுக்கன் போன்ற படங்களில் நடித்தார். மீண்டும் கெளதம் இயக்கத்தில் உருவான ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அவர் முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் அவர் நடித்திருந்தாலும் நடிப்பில் மிரட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’வை ராஜா வை’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான அச்சம் என்பது மடமையடா உட்பட சில படங்களில் நடித்தவர், தளபதி விஜய் நடித்த பைரவா திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யே அவரது நடிப்பை புகழ்ந்து பாராட்டினார். அதன் பிறகு இப்படை வெல்லும், மாயவன், வடசென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான அரியவன் என்ற திரைப்படத்தில் டேனியல் பாலாஜி, தென்னிந்திய மொழிகளில் தனது மிரட்டலான வில்லன் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
டேனியல் பாலாஜிக்கு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் கனவாக உள்ளது. இயக்குனர் படிப்பை முறைப்படி முடித்த அவர் விரைவில் ஒரு படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.