தமிழ் திரை உலகை ஒரு காலத்தில் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் ஆண்டார்கள் என்று சொன்னால் அது நிச்சயம் மிகையாகாது. இருவரும் போட்டி போட்டு பல ஹிட் படங்களை கொடுத்துள்ள சூழலில், அவர்கள் இருவருடனும் இணைந்து நடித்துள்ள காமெடி நடிகர்களில் முக்கியமான ஒருவர் தான் ஏ. கருணாநிதி. இவரது முதல் படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான ’ஆதித்தன் கனவு’ என்ற படம் தான்.
அந்த படத்தில் அவர் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தாலும் அதன் பிறகு மீண்டும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான ’திகம்பர சாமியார்’ என்ற படத்தில் அவருக்கு மாணிக்கம் என்ற ஒரு நல்ல கேரக்டர் கிடைத்தது. எம்என் நம்பியார் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் ஏ கருணாநிதி சிறப்பாக நடித்திருப்பார். அதன் பிறகு எம்ஜிஆர் நடித்த ’மந்திரிகுமாரி’ உட்பட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
எல் வி பிரசாத் இயக்கத்தில் உருவான ’மிஸ்ஸியம்மா’ என்ற திரைப்படத்தில் அவர் பாண்டியா என்ற கேரக்டரில் காமெடியில் கலக்கி இருப்பார் என்பதும் அதேபோல் நல்லதங்காள், பெண்ணரசி, கண்ணின் மணிகள், நான் பெற்ற செல்வம், பாசவலை, அம்பிகாபதி போன்ற படங்களில் அவர் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருப்பார். எம்.ஜி.ஆர் நடித்த ’மகாதேவி’ என்ற திரைப்படத்தில் முத்துப் புலவர் என்ற கேரக்டரில் நடித்து அசத்தி இருப்பார்.
ஏ கருணாநிதிக்கு திருப்புமுனையை தேடி தந்த படம் என்றால் அது சிவாஜி கணேசன் நடித்த ’வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் தான். பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அவர் சுந்தரலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். எதிரிகளை வேவு பார்க்கும் ஒற்றன் கேரக்டரில் நடித்து கலக்கவும் செய்திருப்பார்.
அதன்பின்னர் ‘அடுத்து வீட்டு பெண்’ ’தெய்வப்பிறவி’ ’எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ ’கப்பலோட்டிய தமிழன்’ ’பாலும் பழமும்’ ’பணம் பந்தியிலே’ உட்பட கடந்த 60களில் அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் . 1970 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் வயது முதிர்வு காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும் அவர் பாதுகாப்பு, ஆதிபராசக்தி, பாபு, தியாகம் போன்ற படங்களில் நடித்தார்.
கடந்த 1980 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ’அன்புக்கு நான் அடிமை’ என்ற திரைப்படத்தில் காவல்துறை கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்த நிலையில் அந்த படத்திற்கு பிறகு அவர் வேறு படங்களில் நடிக்கவில்லை. நடிப்பு மட்டுமின்றி அவர் தி நகரில் அமைந்துள்ள மாமியார் ஹோட்டல் என்ற அசைவ ஓட்டலை நடத்தி வந்தார். இந்த ஓட்டலின் உணவு வகைகள் அந்த சமயம் மிக பிரபலமாகவும் இருந்தது.
சர்க்கரை நோயால் அவதிப்பட்ட அவர் கடைசி காலங்களில் சினிமா மற்றும் தொழில் ஆகிய இரண்டுமே கவனிக்க முடியாமல் 1981ம் ஆண்டு காலமானார். தமிழ் திரை உலகில் வித்தியாசமான காமெடி நடிப்பின் மூலம் முத்திரை பதித்த ஏ கருணாநிதியின் காமெடி காட்சிகள், இன்றும் கூட பழைய படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது அவருடைய நடிப்பை அனைவரும் கண்டு ரசிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.