கேப்டன் விஜயகாந்த் காலமான சோகம் இன்னும் தமிழக மக்களை கண்ணீர்க் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. திரைத்துறையில் கேப்டன் விஜயகாந்த் செய்த உதவிகள் சொல்லி மாளாதது. எத்தனையோ இயக்குநர்களை, தயாரிப்பாளர்களை, நடிகர்களை வளர்த்து விட்ட வள்ளல். தன் படங்களில் பலருக்கும் சான்ஸ் கொடுத்து இன்று அவர்கள் நல்லநிலையில் வாழ வழிவகை செய்தவர்.
ஆனால் கேப்டன் தன் இளைய மகன் சண்முகப் பாண்டியனை சினிமாவில் அறிமுகப்படுத்தினாலும் ஓரிரு படங்களைத் தவிர அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 2015-ல் சகாப்தம் என்ற படத்திலும், 2018-ல் மதுர வீரன் என்ற படத்திலும் நடித்த போதும் சரியான கதைக்களம் மற்றும் வாய்ப்புகள் அமையவில்லை. இருப்பினும் தற்போது குற்றப் பரம்பரை வெப் சீரிஸிலும், படைத்தலைவன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சண்முகப் பாண்டியனுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பேசியுள்ளார். அதில், “சினிமாவில் எத்தனையோ கலைஞர்களுக்கு வாழ்வளித்துள்ளார் கேப்டன். தற்போது அவரது மகன் சண்முகன் பாண்டியன் படத்திற்கு எவ்வளவு விளம்பரங்கள் தேவையோ அதை நான் இறங்கிச் செய்யத் தயாராக உள்ளேன். மேலும் டபுள் ஹீரோ கதையம்சம் உள்ள படங்களில் சண்முகப்பாண்டியனுடன் இணைந்து நடிக்க நான் தயாராக உள்ளேன்.
மேலும் படக்குழு ஒத்துழைப்பு கொடுத்தால் ஒரு பாடல் அல்லது ஒரு சண்டைக் காட்சி, அல்லது ஒரு காட்சியிலாவது நடிக்க தயாராக உள்ளேன். எத்தனையோ பேருக்கு வாழ்வளித்த கேப்டனின் மகனின் சினிமா வளர்ச்சியில் நாமும் துணையாக நிற்போம். இதுதான் அவருக்குச் செய்யும் மிகப் பெரிய அஞ்சலியாக இருக்கும்“ என்று பேசியுள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே தன்னுடைய பல படங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சான்ஸ் கொடுத்து அவர்களின் திறமையை அங்கீகரித்திருப்பார். மேலும் பலருக்கு தன்னுடைய தொண்டு நிறுவனம் மூலம் உதவிகள் செய்து வருகிறார். தற்போது விஜயகாந்தின் குணத்தையே பின்பற்றி அவரது மகனுக்கே ஆதரவுக் கரம் நீட்டியிருப்பது சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. ராகாவா லாரன்ஸ்ன் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
