காமெடியில் கலக்கிய சின்னி ஜெயந்த்.. மகனை சினிமாவிற்குள் நுழைக்காமல் ஐஏஎஸ் ஆக்கி அழகு பார்த்த நடிகர்

By Bala Siva

Published:

நகைச்சுவை நடிப்பால் பலரது மனதையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் சின்னி ஜெயந்த். சென்னையை சேர்ந்த இவர், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்து விட்டு, நியூ கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அதன் பின்னர் அவர் திரைப்பட கல்லூரியில் டிப்ளமோ படித்து, முறையாக  நடிப்பு உலகில் நுழைந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் உருவான ‘கை கொடுக்கும் கை’ என்ற படத்தில் முதன் முதலில் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார்.

முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த நிலையில் அதன் பின்னர் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார். மணிவண்ணன் இயக்கத்தில் உருவான 24 மணி நேரம் , ஜனவரி 1 ஆகிய படங்கள் அவருக்கு நல்ல முறையில் கை கொடுத்தன. மேலும் இதய கோவில், முதல் வசந்தம், பாரு பட்டணம் பாரு, லட்சுமி வந்தாச்சு,  சின்ன பூவே மெல்ல பேசு, அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களில் நடித்தார்.

chinni jayanth2

ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் ரஜினியின் நண்பராக நடித்து காமெடியில் கலக்கி இருப்பார். அதே போல் விஜயகாந்த் நடித்த நல்லவன் திரைப்படத்தில் விஜயகாந்த் நண்பராகவும் நடித்திருப்பார். பல படங்களில் அவர் நகைச்சுவை நடிப்பு மட்டுமின்றி குணச்சித்திர கேரக்டரிலும் நடித்து அசத்தி இருப்பார். பெரும்பாலான படங்களில் அவர் ஹீரோவுக்கு நண்பர் என்ற கதாபாத்திரத்திலும் மக்கள் மனம் கவர்ந்துள்ளார்.

குறிப்பாக கார்த்திக் நடித்த கிழக்கு வாசல் என்ற திரைப்படத்தில் அவரது குணச்சித்திர நடிப்பு காண்போரை கவர்ந்தது.  1984 ஆம் ஆண்டு தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த சின்னி ஜெயந்த், தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு அவர் யாதும் ஊரே யாவரும் கேளிர், வீரன் ஆகிய படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிப்பு, மட்டுமின்றி அவர் இயக்குனர் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அவரே ஹீரோவாக நடித்த ’உனக்காக மட்டும்’ என்ற படத்தை கடந்த 2000 ஆண்டு இயக்கினார். அதனை அடுத்து கானல் நீர் மற்றும் நீயே என் காதலே போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்.

chinni jayanth

மேலும் அவர் சில படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார். குறிப்பாக அமீர்கான், ரஜினிகாந்த் நடித்த ஹிந்தி படம் ஒன்றுக்கு அவர் ரஜினிகாந்த்துக்கு குரல் கொடுத்திருப்பார். இவர் ஒரு மிகச்சிறந்த மிமிக்ரி கலைஞர் என்பதால் ரஜினிகாந்த் போலவே குரல் கொடுப்பதில் சிக்கலும் பெரிதாக உருவாகவில்லை.

மேலும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ’பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் தொடரிலும் இவர் நடித்துள்ளார். நடிகர் சின்னி ஜெயந்த் தனது மகனை திரைப்பட தொழிலுக்கு நுழைக்காமல் நன்றாக படிக்க வைத்தார். அவரது மகன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய நிலையில் வெற்றி பெற்றார். தமிழ் திரை உலகில் ஒரு நடிகர் தனது வாரிசை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மாற்றியது அனேகமாக சின்னி ஜெயந்த் மட்டும் தான் என்றும் கருதப்படுகிறது.