ரங்கம்மா பாட்டி என திரை உலகினரால் அன்புடன் அழைக்கப்படும் ரங்கம்மாள் என்ற நடிகை 500 படங்களுக்கு மேல் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். ஆனால் கடைசி காலத்தில் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் வறுமையில் வாடியதால் அவருக்கு நேர்ந்த சம்பவம் பலரையும் வாட்டி எடுத்திருந்தது.
நடிகை ரங்கம்மா, எம்ஜிஆர் நடித்த ’விவசாயி’ என்ற திரைப்படத்தில் கடந்த 1967ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினிகாந்த் – கமல்ஹாசன், விஜய் – அஜித் உட்பட மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் பாட்டி மற்றும் அம்மா கேரக்டரில் தான் நடித்துள்ளார்.
எம்ஜிஆர் உடன் விவசாயி, காவல்காரன், நம் நாடு, என் அண்ணன், நல்ல நேரம், நான் ஏன் பிறந்தேன் போன்ற படங்களிலும் சிவாஜியுடன் ராஜராஜ சோழன் உட்பட பல படங்களிலும், ரஜினியின் படிக்காதவன், பணக்காரன், பாபா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அஜித்துடன் அவள் வருவாளா என்ற படத்தில் ரங்கம்மா பாட்டி நடித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ரோஜா’ மற்றும் ’அலைபாயுதே’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ’புத்தம் புது காலை விடியாதா’ என்ற வெப் தொடரிலும் சில குறும்படங்களிலும் இவர் நடித்துள்ளார். அவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
பல திரைப்படங்களில் இவர் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக வடிவேலுவுடன் நடித்த ஒரு படத்தில் ’போறது போற அந்த நாயை கொஞ்சம் விரட்டிட்டு போ’ என்று ரங்கம்மா பாட்டி பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. ஜெயலலிதா நடித்த சூரியகாந்தி என்ற திரைப்படத்தில் இவர் ’பரமசிவன் கழுத்தில் இருந்து’ என்ற பாடலின் போது ஜெயலலிதா அருகில் உட்கார்ந்து இருப்பார்.
சீவலப்பேரி பாண்டி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு போன்ற படங்களில் இவரது நடிப்பு தனித்துவமாக இருக்கும். வடிவேலு, விவேக் உள்பட பல முன்னணி காமெடி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். அதே போல கஞ்சா கருப்பு மற்றும் சந்தானம் உள்ளிட்டவர்களுடனும் இணைந்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக சந்தானம் நடித்த பிஸ்தா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ரங்கம்மா பாட்டியின் வாழ்நாளில் கடைசியாக சில ஆண்டுகளில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் அவர் வறுமையில் வாடினார். இதையடுத்து தனது செலவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப், சோப்பு பொம்மை ஆகிவற்றை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். மேலும் தனக்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து சில நடிகர்கள் இவருக்கு பணம் கொடுத்து உதவி செய்தனர்.
ஆனால் வயது முதிர்வு காரணமாக இவர் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான கோயமுத்தூர் அருகில் உள்ள அன்னூர் என்ற பகுதிக்கு சென்று விட்டார். அங்கு சில நாட்களாக அவர் உடல்நலமின்றி இருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி காலமானார்.